சென்னை: கடந்த ஆண்டு மட்டும் 20 ஆயிரம் பேரை நாய்கள் கடித்துள்ளன - அதிர்ச்சி தகவல்


சென்னை: கடந்த ஆண்டு மட்டும் 20 ஆயிரம் பேரை நாய்கள் கடித்துள்ளன - அதிர்ச்சி தகவல்
x

சென்னையில் எத்தனை நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன? என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வக்கீல் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “ராட்வீலர் என்ற வெளிநாட்டு ரக நாய்கள் மிகவும் ஆக்ரோஷமானது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த வகை நாய்களுக்கு வாய்மூடி அணியாமல் அதன் உரிமையாளர்கள் நடைபயிற்சிக்கு அழைத்து வரக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை பெருநகர மாநகராட்சி கால்நடை தலைமை அதிகாரி டாக்டர் கமால் உசேன் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் மற்றும் விதிகளின்படி சென்னை மாநகரத்துக்குள் செல்லப்பிராணிகளை வளர்ப்போர் அந்த செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற வேண்டும். இந்த உரிமத்தை ஆன்லைன் மூலமாக பெறலாம். செல்லப்பிராணிகளின் புகைப்படம், அதன் உரிமையாளர்கள் புகைப்படம், முகவரி உள்ளிட்டவைகளை பதிவேற்றம் செய்து, ரூ.50 கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும்.

உரிமம் வழங்கும்போது, செல்லப்பிராணிகளுக்கு கருத்தடை செய்ய வேண்டும். நோய்த்தடுப்பு ஊசிகளை போட வேண்டும். செல்லப்பிராணிகள் சாலையில் மலம் கழித்தால், அதை சுத்தம் செய்வது அதன் உரிமையாளர்களின் கடமை. பிறருக்கும், பொது சுகாதாரத்துக்கும் தொந்தரவு இல்லாமல் வளர்க்க வேண்டும் என்று நிபந்தனைகளும் விதிக்கப்படுகிறது. இதுவரை 11 ஆயிரத்து 630 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டு உள்ளது.

நாய்க்கடி இல்லாத சென்னை என்ற இலக்கை அடைய கடந்த 9-ந்தேதி முதல் தெருநாய்களுக்கு ‘வெறிநாய் தடுப்பூசி முகாம்கள்' நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இதையடுத்து நடந்த விசாரணையின்போது சென்னையில் எத்தனை நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரி, கடந்த ஆண்டு மட்டும் சுமார் 20 ஆயிரம் பேரை நாய்கள் கடித்த சம்பவங்கள் நடந்துள்ளன என்றார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், ‘‘தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்து தடுப்பூசி போட்டு மீண்டும் அதே பகுதியில் விடுவதற்கு பதிலாக அவற்றை துன்புறுத்தாமல், தொந்தரவு செய்யாமல் உணவு உள்ளிட்ட வசதிகளுடன் தனியாக காப்பகம் அமைத்து பராமரிக்கலாம். ‘நாய் கடி இல்லாமல், அதேநேரம் நாய்களை கொல்லாமல்' இதற்கு ஒரு தீர்வுகாண வேண்டும்'' என்று கருத்து தெரிவித்தனர்.

பின்னர் தெருநாய் விவகாரம் தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருவதால், நாய்க்கடி சம்பவங்களைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பாக விரிவான அறிக்கை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை 3 வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

1 More update

Next Story