

சென்னை,
சென்னை அண்ணா சாலையில் கல்லூரி மாணவர்கள் மிகவும் ஆபத்தான முறையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் சாகசம் மற்றும் ரேசில் ஈடுபட்டனர். இதில், ஒரு மாணவர் விலை உயர்ந்த தனது மோட்டார் சைக்கிளின் முன்பக்க சக்கரத்தை தலைக்கு மேல் தூக்கியபடி பின்பக்க சக்கரத்தை மட்டும் பயன்படுத்தி(வீலிங்) நீண்டதூரம் மேட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மோட்டார் சைக்கிள் சாகசம் மற்றும் ரேசில் ஈடுபட்டது தொடர்பாக ஆம்பூரைச் சேர்ந்த முகமது ஹரீஸ் (வயது 19), முகமது சைபான் (18) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், அண்ணா சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசங்களில் ஈடுபட்ட சம்பவத்தில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். பைரோஸ் மாலிக் (20), இம்ரான் அலிகான் (19), முகேஷ் (19) ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.