சென்னை: தேங்கியுள்ள 400 டன் வெங்காயம் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசுகிறது; பயணிகள் குற்றச்சாட்டு

நாபெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த 400 டன் வெங்காயக்கொள்முதல் மற்றும் விநியோக ஆணையை ரத்து செய்தது.

சென்னை:  தேங்கியுள்ள 400 டன் வெங்காயம் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசுகிறது; பயணிகள் குற்றச்சாட்டு
Published on: 

சென்னை

சென்னை கொருக்குப்பேட்டையில் நிற்கும் ரெயிலில் உள்ள 400 டன் வெங்காயம் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசுகிறது என பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருளான வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்ய, தமிழ்நாடு அரசு சந்தை குறுக்கீட்டு நடவடிக்கையாக வெங்காயத்தை கொள்முதல் செய்து, கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் நியாயவிலை கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.

2,380 டன் வெங்காயம்

இதன்படி, மொத்தம் 2,380.32 டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, நியாய விலைக்கடைகள் மூலம் இதுவரை பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், வரப்பெற்ற வெங்காயம் அனைத்தும் 25 நாட்களுக்கு முன்பே விற்றுத்தீர்ந்து விட்டது. ரேசன் கடைகள் மூலம் வெங்காய விற்பனை தற்போது நடைபெறவில்லை.

இந்நிலையில், நாபெட் நிறுவனத்திடமிருந்து கிலோ ரூ.29 வீதம் 400 டன் வெங்காயம் கொள்முதல் செய்ய அக்டோபர் மாதம் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் ஆணை வழங்கியிருந்தது. இக்கொள்முதலுக்கான வெங்காயம் 'ஏ' தரத்திலும், குறைந்தபட்சம் 45 மி.மீ. அளவிலும் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அழுகிய வெங்காயங்கள்

ஆனால், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின்போது, 'ஏ தர வெங்காயத்துடன் அழுகிய மற்றும் நிராகரிப்பு தர வெங்காயங்கள் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. மேலும், கொருக்குப்பேட்டைக்கு வந்த வெங்காய சரக்கை கடந்த அக்டோபர் 31-ந்தேதி கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்தபோது, மாதிரி மூட்டைகளில் 20 சதவீதம் முதல் 26 சதவீதம் வரை அழுகிய, முளைத்த மற்றும் பூஞ்சை பாதித்த வெங்காயங்கள் கழிவாக இருந்தது தெரியவந்தது. அத்துடன், 50.2 சதவீத வெங்காயம் நிர்ணயிக்கப்பட்ட 45 மி.மீ. அளவைவிட குறைவாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், அக்டோபர் 31-ந்தேதி அன்றே நாபெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த 400 டன் வெங்காயக்கொள்முதல் மற்றும் விநியோக ஆணையை ரத்து செய்தது.

400 டன் வெங்காயம்

இதுதொடர்பாக கூட்டுறவு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு நிறுவனத்திடமிருந்து 400 டன் வெங்காயம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் வழங்கிய ஆணை, வெங்காயம் தரமற்றதாக இருப்பது கண்டறியப்பட்டதால் அக்டோபர் 31-ந்தேதி அன்றே ரத்து செய்யப்பட்டது. கொருக்குப்பேட்டை முனையத்தில் உள்ளதாக கூறப்படும் தரமற்ற வெங்காயம் நாபெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. அது கூட்டுறவு துறையின் வெங்காயம் அல்ல என தெரிவிக்கப்பட்டது.

பயணிகள் குற்றச்சாட்டு

இந்த சூழலில், கொருக்குப்பேட்டையில் ரெயிலில் தேங்கியிருக்கும் 400 டன் வெங்காயம், மத்திய அரசு அனுப்பியது என்றும், அவை தரமற்ற வெங்காயம் எனவும், ரெயிலில் உள்ள வெங்காயம் அழுகி துர்நாற்றம் வீசுவதாகவும் புகார் எழுந்துள்ளது. மத்திய அரசு காந்தா விரைவு ரெயிலில் அனுப்பிய 400 டன் வெங்காயம் சென்னையில் தேக்கம் அடைந்துள்ளன.

400 டன் வெங்காயத்துடன் கொருக்குப்பேட்டையில் நிற்கும் ரெயிலில் உள்ள வெங்காயம் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசுவதாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.

X