

சென்னை,
சென்னையில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 900 வாகனங்களின் விவரங்கள் மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத வாகனங்கள் மின்னனு ஏலம் மூலம் கழிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து காவல் நிலையப் பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 900 எண்ணிக்கையிலான பல்வேறு வாகனங்களை அப்புறப்படுத்தி, கோட்டூர்புரம் காவல் நிலைய குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாகனங்களின் விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாகனங்களை உரிமை கோருவோர் சம்பந்தப்பட்ட காவல் நிலையமான சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தினை இந்த செய்தி வெளியான 15 நாட்களுக்குள் அணுக வேண்டும். அவ்வாறு 15 நாட்களில் உரிமை கோரப்படாத வாகனங்களை மின்னனு ஏலம் மூலம் கழிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.