

சென்னை
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில் காலை 6.45 மணி அளவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் நின்று கொண்டிருந்தார். அந்த வாலிபர் அரைக்கால் டிரவுசர் அணிந்திருந்தார்.
இந்த பகுதியில் கார்மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்காக பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தரை தளத்தில் இருந்து சுமார் 50 அடி உயரத்தில் உள்ள இந்த பாலத்தில் இருந்து வாலிபர் திடீரென கீழே குதித்தார்.
இதில் உடல் சிதறிய அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். இதைப் பார்த்ததும் விமான நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் விமான நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட வாலிபர் கைப்பை ஒன்றையும் வைத்திருந்துள்ளார். அதில் அவரை பற்றிய தகவல்கள் உள்ளதா? என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் கையில் என்ன இருந்தது? வாலிபர் பற்றிய தகவல்கள் கிடைத்ததா? என தெரியவில்லை