

சென்னை,
சென்னை மத்திய ரெயில் நிலையம், ஆவடி மற்றும் அரக்கோணம் இடையே புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள குளிர்சாதன (ஏசி) புறநகர் மின்சார ரெயில் சேவையின் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகப் பயணிகள் பெரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை முதல் பயன்பாட்டிற்கு வந்த இந்த ஏசி மின்சார ரெயிலில், அரக்கோணத்தில் இருந்து சென்னை மத்திய ரெயில் நிலையத்திற்குச் செல்ல ரூ.230-ம், ஆவடியில் இருந்து அரக்கோணம் செல்ல ரூ.200-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இயங்கும் ஏ.சி. மின்சார ரெயிலில் 59 கி.மீ. தூரத்திற்கு முழுப் பயண கட்டணமாக ரூ.105 மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், புதிய வழித்தடத்தில் 68 கி.மீ. தூரத்திற்கு ரூ.230 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.
வரும் டிசம்பர் 24-ம் தேதி வரை 2 மாத காலத்திற்குச் சோதனை அடிப்படையில் இந்த சேவை இயக்கப்படுகிறது. வார நாட்களில் சென்னை மத்திய ரெயில் நிலையம், ஆவடி மற்றும் அரக்கோணம் இடையே 3 ஜோடி ஏ.சி. ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
முன்னதாக சென்னையில் முதன்முறையாக கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏ.சி. மின்சார ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் தூரத்திற்கு ஏற்ப ரூ.35 முதல் ரூ.105 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய வழித்தடத்தில் கட்டணம் மிக அதிகமாக உள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ள ரெயில் பயணிகள், அந்த கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.