சென்னையில் பைக் நிறுத்துவதில் தகராறு: டெலிவரி ஊழியர் தாக்கியதில் காயம் அடைந்த காவலாளி உயிரிழப்பு

போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தினேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் பைக் நிறுத்துவதில் தகராறு: டெலிவரி ஊழியர் தாக்கியதில் காயம் அடைந்த காவலாளி உயிரிழப்பு
Published on

போரூர்,

சென்னை நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 47). கே.கே. நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 3-ந்தேதி வேல்முருகன் பணியில் இருந்தபோது, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டுக்கு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட காய்கறி மற்றும் பால் பாக்கெட்டுகளை டெலிவரி செய்வதற்காக ஆன்லைன் டெலிவரி ஊழியரான விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த தினேஷ் (24) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அப்போது வாகன நிறுத்தும் இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே செல்லுமாறு வேல்முருகன் கூறினார். ஆனால் தினேஷ், மோட்டார் சைக்கிளுடன் குடியிருப்பு வளாகத்திற்குள் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தினேஷ் திடீரென மோட்டார் சைக்கிளால் வேல்முருகனை மோதி கீழே தள்ளிவிட்டு சரமாரியாக அடித்து உதைத்தார். இந்த கொலைவெறி தாக்குதலில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த வேல்முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை வேல்முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கே.கே.நகர் போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தினேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com