பழுதாகி நின்ற லாரி மீது சென்னை பஸ் மோதி 2 பேர் பலி

சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
பழுதாகி நின்ற லாரி மீது சென்னை பஸ் மோதி 2 பேர் பலி
Published on

விருதுநகர்,

தூத்துக்குடியில் இருந்து உப்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை நோக்கி வந்தது. லாரியை சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த சித்தையன் (வயது 64) ஓட்டி வந்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி நான்கு வழிச்சாலையில் லாரி வந்தபோது திடீரென டயர் பஞ்சர் ஆனதால் டிரைவர் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு, மாற்று டயர் பொருத்திக் கொண்டிருந்தார்.

அப்போது, திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பஸ், திடீரென பழுதாகி நின்ற லாரியின் பின்னால் அதிவேகமாக மோதியது.

இதில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பலர் காயம் அடைந்து அலறினர். அந்த சமயத்தில் வேகமாக வந்த கார் ஒன்று, ஆம்னி பஸ்சின் பின்னால் மோதி நொறுங்கியது.

2 பேர் பலி

இந்த விபத்தில் லாரி டிரைவர் சித்தையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் ஆம்னி பஸ் மற்றும் காரில் பயணம் செய்த பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி, ஆம்னி பஸ் பயணியான தூத்துக்குடியை சேர்ந்த ரவிதாகூர் (40) உயிரிழந்தார். விபத்தில் காயம் அடைந்த மற்ற 14 பேரில், 2 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். மற்றவர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com