சென்னையில் உள்ள அனைத்து பேருந்து நிழற்குடைகளிலும் நாளை மறுநாள் சிறப்பு தீவிரத் தூய்மைப் பணி

பேருந்து நிழற்குடைகளில் உள்ள பழுதுகள் மற்றும் சேதமடைந்த பகுதிகள் கண்டறியப்பட்டு, சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிழற்குடை
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் உள்ள அனைத்து பேருந்து நிழற்குடைகளிலும் நாளை மறுநாள் சிறப்பு தீவிரத் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு தூய்மையான, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சூழலை உறுதி செய்யும் வகையில், வருகின்ற 28.11.2026 (சனிக்கிழமை) பெருநகர சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் உள்ள பேருந்து நிழற்குடைகளில் சிறப்பு தீவிரத் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இச்சிறப்பு தூய்மைப் பணியின் ஒரு பகுதியாக, அனைத்து மண்டலங்களிலும் உள்ள பேருந்து நிழற்குடைகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் கீழ்க்கண்ட விரிவான தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

1. பேருந்து நிழற்குடைகளில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து அனுமதியற்ற சுவரொட்டிகள் மற்றும் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள் முழுமையாக அகற்றப்படும்.

2. பேருந்து நிழற்குடைகளில் உள்ள இருக்கைகள் மற்றும் பின்புறப் பகுதிகள் நன்கு சுத்தம் செய்யப்படும்.

3. பேருந்து நிழற்குடைகளின் தரைப்பகுதி, கூரை, தூண்கள் மற்றும் இதர அனைத்துப் பகுதிகளும் தண்ணீர் பயன்படுத்தி முழுமையாகச் சுத்தம் செய்யப்படும்.

4. பேருந்து நிழற்குடைகளில் உள்ள பழுதுகள் மற்றும் சேதமடைந்த பகுதிகள் கண்டறியப்பட்டு, அவற்றின் விவரங்கள் மற்றும் தேவையான அளவீடுகள் முறையாகப் பதிவு செய்யப்படும். மேலும், அவற்றை உடனடியாகச் சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

5. மேற்கொள்ளப்படவுள்ள தீவிரத் தூய்மைப் பணிகள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு, தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இத்தூய்மைப் பணியினைச் சிறப்பாகச் செயல்படுத்தும் வகையில், போதுமான எண்ணிக்கையிலான தூய்மைப் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், வாகனங்கள் மற்றும் தேவையான இயந்திரங்களைப் பணியில் ஈடுபடுத்துமாறு அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தூய்மைப் பணிகள் முறையாக நடைபெறுவதைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், பேருந்து நிழற்குடைகளின் தூய்மையைத் தொடர்ந்து பராமரிக்க உரிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்து நிழற்குடைகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளின் தூய்மையைப் பராமரிக்கும் வகையில், பொதுமக்கள் குப்பைகளைக் கண்ட இடங்களில் வீசுவதைத் தவிர்த்து, பேருந்து நிழற்குடைகளில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே குப்பைகளைப் போட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் இச்சிறப்பு தூய்மைப் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை மாநகரின் அனைத்து குடியிருப்பாளர்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கும் தூய்மையான, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான பொது இடங்களை வழங்குவதில் பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்ந்து உறுதிபூண்டு செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X