

சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யை சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினர் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் வணிகச் செயல்முறைகளை மேலும் எளிமைப்படுத்துவது, அதன்மூலம் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
அரசு மற்றும் தொழிலகங்கள் இடையே, பயனுள்ள இணைப்புப் பாலமாகச் செயல்பட்டு வரும் சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு குழு அமைப்பின் முக்கியப் பங்கினை முதல்-அமைச்சர் விஜய் பாராட்டினார். மேலும், சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்பால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைக் கவனமாகக் கேட்டறிந்து, அவற்றிற்குத் தீர்வு காணும் வகையில் ஆவன செய்யப்படும் என்று தெரிவித்தார்.
அத்துடன் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்க, சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு குழு தொடர்ந்து தனது ஒத்துழைப்பையும், வழிகாட்டுதலையும் வழங்கிடுமாறு முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டார். இச்சந்திப்பில், சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு குழு தலைவர் மற்றும் கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் ஆலோசகர் ராம்குமார் சங்கர், துணைத் தலைவர் மற்றும் டெல்பி டிவிஎஸ் தலைவர் ஏ. விஸ்வநாதன் மற்றும் சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு குழு பொதுச்செயலாளர் கே. சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.