பாதுகாப்பான நகரங்களாக சென்னை, கோவை தேர்வு: பெண்களுக்கான முன்னேற்றம், வளர்ச்சி திட்டங்களில் தமிழகம் முதலிடம்

பெண்களுக்கான முன்னேற்றம், வளர்ச்சி திட்டங்களில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. மேலும் பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்களாக சென்னை, கோவை தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன.
பாதுகாப்பான நகரங்களாக சென்னை, கோவை தேர்வு: பெண்களுக்கான முன்னேற்றம், வளர்ச்சி திட்டங்களில் தமிழகம் முதலிடம்
Published on

பெண்கள், குழந்தைகளுக்கான திட்டங்கள்

தமிழக அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளை மையப்படுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் இதுவரை 2 லட்சத்து 85 ஆயிரம் பெண்கள் பயனடைந்துள்ளனர்.

கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கறவைமாடுகள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 1 லட்சத்து 11 ஆயிரத்து 444 கறவைமாடுகளும், 52 லட்சத்து 88 ஆயிரத்து 608 ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய காவலன் செயலி மற்றும் அம்மா ரோந்து வாகனங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

50 சதவீதம் இடஒதுக்கீடு

முதல்-அமைச்சரின் பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் வரை வைப்புநிதியாக 10 லட்சம் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. பெண் அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு 3 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த 25 லட்சம் தாய்மார்களுக்கு 15 பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தைகள்நலப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.

பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த, மகளிர் சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த 45 லட்சத்து 77 ஆயிரத்து 484 பெண்களுக்கு ரூ.81 ஆயிரத்து 52 கோடி கடன் வழங்கப்பட்டு இருக்கிறது.

போலீஸ்துறையில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடும், முழுவதும் பெண் போலீசாரை கொண்ட மகளிர் காவல்படையும் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. பெண்களுக்கு அதிகாரம் வழங்கிட உள்ளாட்சிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு விருது

இந்த திட்டங்களை எல்லாம் சிறந்த முறையில் செயல்படுத்தியதற்காக மத்திய அரசு, தமிழக அரசுக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது. இதுதவிர, பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்களாக சென்னையும், கோவையும் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன.

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com