மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு 2 புதிய சேவை வாகனங்கள்: சென்னை கலெக்டர் தொடங்கி வைத்தார்

இந்த திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, பொருளாதார சுயசார்பு மற்றும் சமூக ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு 2 புதிய சேவை வாகனங்கள்: சென்னை கலெக்டர் தொடங்கி வைத்தார்
மாவட்ட கலெக்டர் எஸ். மாலதி ஹெலன்
Published on: 

சென்னை,

சென்னை மாநகராட்சி, அமைந்தகரை மற்றும் எழும்பூரில் உள்ள சிறப்பு பிரிவு நகர்ப்புற வீடற்றோர் காப்பகங்களில் தங்கியுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக வாகன சுத்தம் மற்றும் பராமரிப்பு சேவைக்கான தொழிற்பயிற்சி, நடமாடும் மளிகை பொருட்கள் விற்பனை அங்காடி உள்ளிட்ட இரண்டு புதிய சேவைகளுக்கான வாகனங்களை சென்னை மாவட்ட கலெக்டர் எஸ். மாலதி ஹெலன், இன்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

மாவட்ட கலெக்டர்

சென்னை மாநகராட்சி, அமைந்தகரை மற்றும் எழும்பூரில் உள்ள சிறப்பு பிரிவு நகர்ப்புற வீடற்றோர் காப்பகங்களில் தங்கியுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார மேம்பாட்டினை கருத்தில் கொண்டு ஹோப் பப்ளிக் சேரிட்டபிள் டிரஸ்ட் அமைப்புடன் இணைந்து வாகன சுத்தம் மற்றும் பராமரிப்பு சேவைக்கான தொழிற்பயிற்சி, நடமாடும் மளிகை பொருட்கள் விற்பனை அங்காடி உள்ளிட்ட இரண்டு புதிய சேவைகளுக்கான வாகனங்களை சென்னை மாவட்ட கலெக்டர் எஸ். மாலதி ஹெலன், இன்று (18.11.2026) ரிப்பன் கட்டட வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து, மாற்றுத்திறனாளி குழந்தைகள் தொழிற்பயிற்சியின் மூலம் தயாரித்த பேக்கரி உணவுப் பொருட்கள் மற்றும் இதர தயாரிப்புகளை காட்சிப்படுத்திய உலா வாகனத்தை பார்வையிட்டார்.

இரண்டு சேவைகள்

1) மொபைல் வாகன சுத்தம் மற்றும் பராமரிப்பு சேவை

மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி அளித்து, வாகனங்களை சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு சேவைகள் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.

2) நடமாடும் மளிகைப் பொருட்கள் விற்பனை

அங்காடி மூலம் அத்தியாவசிய மளிகை மற்றும் அன்றாட தேவைக்கான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குவதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் மற்றும் நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்குதல்.

இத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, பொருளாதார சுயசார்பு மற்றும் சமூக ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன.

தொண்டு நிறுவனம்

சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் அமைந்தகரை மற்றும் எழும்பூரில் செயல்பட்டு வரும் இரண்டு சிறப்பு பிரிவு நகர்ப்புற வீடற்றோர் காப்பகங்களை தொண்டு நிறுவனம் பராமரித்து வருகிறது. இக்காப்பகங்களில் சுமார் 60 பயனாளிகள் தங்கி, பாதுகாப்பான தங்குமிடம், மருத்துவ உதவி, உணவு மற்றும் மறுவாழ்வு சேவைகளைப் பெற்று வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (வடக்கு) சரவணகுமார், தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர்ராஜ்குமார், தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் நாகராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X