சென்னை கல்லூரி விடுதிகளில் கலவை சாதம் மட்டும் தயாரிப்பு: 'சைடிஷ் கட்' ஆனதால் மாணவர்கள் புலம்பல்

சென்னை கல்லூரி விடுதிகளில் கலவை சாதம் மட்டும் தயாரிப்பு: 'சைடிஷ் கட்' ஆனதால் மாணவர்கள் புலம்பல்

வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், கல்லூரிகளில் விடுதியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Published on

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில், தரவரிசையில் முன்னணியில் உள்ள கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து படித்து வருகிறார்கள்.

இதுபோன்ற கல்லூரிகளில் உள்ள விடுதியில் மட்டும் தங்கிப்படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும். இந்த மாணவர்களுக்கு, ஆண்டு கல்விக் கட்டணத்துடன் விடுதிக்கட்டணமும் வசூலிக்கப்பட்டு விடுவதால், உணவு வகைகளிலும் தாராளம் காட்டப்படுகிறது.

ஆனால், தற்போது வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், கல்லூரிகளில் விடுதியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல கல்லூரி விடுதிகளில் விறகு அடுப்புக்கு மாறத் தொடங்கிவிட்டார்கள். அதற்கு மாற வாய்ப்பு இல்லாத கல்லூரிகளில், உணவு மெனுக்களை குறைத்துவிட்டனர். தினமும் விதவிதமான அசைவ மற்றும் சைவ உணவு வகைகள் வழங்கி வந்த நிலையில், தற்போது சைவத்தில் கலவை சாதம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

'சைடிஷ்' வகைகளும் 'கட்' செய்யப்பட்டுள்ளதால், விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விரும்பிய உணவு கிடைக்கவில்லை என்று ஊரில் உள்ள பெற்றோரிடம் போன் மூலம் புலம்பி வருகின்றனர். சென்னை மதுரவாயலில் உள்ள பிரபல கல்லூரியில், வணிக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் விடுதிகள் மூடப்பட்டுள்ளன. அதில் தங்கியிருந்த மாணவ-மாணவிகளுக்கு வரும் 25-ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பூந்தமல்லியில் உள்ள பிரபல என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் கலவை சாதம் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 'சைடிஷ் கட்' செய்யப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்ந்தால், விடுதி மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் யோசித்து வருகிறது. இதுதான் பல கல்லூரிகளின் நிலைமை. ஈரான் - இஸ்ரேல் போர் தாக்கம் இங்குள்ள கல்லூரிகளையும் விட்டுவைக்கவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com