சென்னை கல்லூரி மாணவர் கொன்று புதைப்பு

பள்ளி மாணவிகளின் ஆபாச பேச்சை வெளியிடுவதாக மிரட்டல்: சென்னை கல்லூரி மாணவர் கொன்று புதைப்பு.
சென்னை கல்லூரி மாணவர் கொன்று புதைப்பு
Published on

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்காடு கிராமத்தில் ஆள்நாடமாட்டம் இல்லாத புறம்போக்கு நிலத்தில் வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தார். கும்மிடிப்பூண்டி தாசில்தார் மகேஷ் முன்னிலையில் உடலை தோண்டி எடுத்து ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (வயது 20) என்பதும், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரிந்தது. பள்ளி மாணவிகள் சிலரிடம் போனில் பிரேம்குமார் ஆபாசமாக பேசி, அதனை செல்போனில் பதிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த ஆபாச பேச்சு மற்றும் மாணவிகளின் புகைப்படத்தை அவர்களது பெற்றோர்களுக்கு அனுப்பி விடுவதாகவும், இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டி மாணவிகளிடம் பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான பள்ளி மாணவிகள், தங்களது இன்ஸ்டாகிராம் நண்பர் ஒருவரிடம் இதுபற்றி கூறியதால், அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரேம்குமாரை கொன்று புதைத்து இருப்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். 2 தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com