

சென்னை,
சென்னையை அடுத்த நன்மங்கலம் பகுதியில் மின்சாரம் தாக்கி கட்டிடத் தொழிலாளி பலியானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த நன்மங்கலம் டாக்டர் அம்பேத்கர் சாலையைச் சேர்ந்தவர் காந்தி (வயது 57). கட்டிடத் தொழிலாளியான இவர், பள்ளிக்கரணை நாராயணபுரம் நாகேஸ்வரியம்மன் பிரதான சாலையில் நடைபெற்று வரும் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று காலை அந்த வீட்டின் முதல் மாடியில் சாரம் பிரிக்கும் பணியில் காந்தி ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கை, சாலையோரம் சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் பட்டது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவர், மயங்கி விழுந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், காந்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.