சென்னை மாநகராட்சி பட்ஜெட் இந்த வாரம் தாக்கல்

பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட் இந்த வாரம் தாக்கல் செய்யப்படும் எனவும், அதில் மழைநீர் வடிகாலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் மேயர் பிரியா தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் இந்த வாரம் தாக்கல்
Published on

சென்னை,

சென்னை ராயபுரம் மண்டலத்தில் பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள ஒரு பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை கமிஷனர் எம்.சிவகுரு பிரபாகரன், மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.எஸ்.ஹேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

சென்னையில் கவுன்சிலர்களின் பரிந்துரைகளை ஏற்று கட்சி வேறுபாடு இன்றி நிதி ஒதுக்கப்படும். தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டதாக பட்ஜெட்டில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. 312 பக்கம் கொண்ட பட்ஜெட்டில் குறிப்பிட்ட திட்டங்களையே அறிவிக்க முடியும். கட்சி வேறுபாடு பார்க்காமல், மக்களுக்கு பயன் தரும் திட்டங்களை எப்போதும் புறக்கணிக்காதவர் முதல்-அமைச்சர் ஸ்டாலின்.

தமிழக அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட் காற்றுப்போன பலூன் போல இருப்பதாக என அ.தி.மு.க. கூறுவது தவறு. அ.தி.மு.க.வே தற்போது காற்றுப் போன பலூன் போலதான் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மாநகராட்சி மேயர் பிரியா கூறுகையில், சென்னையில் இந்த மாத இறுதிக்குள் அனைத்து மண்டலங்களிலும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் நடைபெறும். ஒவ்வொரு முகாமிலும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த மாதம் 30-ந் தேதி மண்டல குழு தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக, இந்த வாரத்தில் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட்டில் மழைநீர் வடிகாலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும், என்றார். இந்தநிலையில், வரும் 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com