

சென்னை,
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட கூட்டரங்கில் இன்று(புதன்கிழமை) காலை 11 மணிக்கு பட்ஜெட் கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது, மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையடுத்து, 20-ந்தேதி பட்ஜெட்டின் மீதான விவாதம் நடைபெறுகிறது.
விவாதத்திற்கு பின்னர் பட்ஜெட் மீது ஒப்புதல் அளிக்கப்படும். பின்னர், தீர்மானங்களாக நிறைவேற்ற வேண்டிய பொருட்கள் எடுத்துக்கொள்ளப்படும். கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் ரூ.8,404 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 80-க்கும் மேற்பட்ட புதிய அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.
குறிப்பாக, புதிய பள்ளி கட்டிடங்கள், மழைநீர் வடிகால் பணிகள், பெண்களுக்கான திட்டங்கள், பெண்கள் சுயதொழில், வேலைவாய்ப்பு, சாலை மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவைகளுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.