

சென்னை,
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், விளையாட்டு வளாகம், சிறுவர் சறுக்கு விளையாட்டு மைதானம், மாநகர மின் பேருந்து பணிமனை உள்ளிட்டவற்றை சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், விளையாட்டு வளாகம், சிறுவர் சறுக்கு விளையாட்டு மைதானம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலக புனரமைக்கும் பணி, மாநகர மின் பேருந்து பணிமனை உள்ளிட்டவற்றை இன்று (23.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாநகராட்சி ஆணையாளர் தண்டையார்பேட்டை மண்டலம், பெரம்பூர், சத்தியமூர்த்தி நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தினைப் பார்வையிட்டு, மருந்தகம், ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள், மருத்துவர் வருகை குறித்தும் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கலந்துரையாடி கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்த மருத்துவமனை வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூபாய் 86.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவமனைக் கட்டடப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், வார்டு-37, சத்தியமூர்த்தி பிரதான சாலையில் உள்ள செயற்கை புல்தரை கால்பந்து மைதானத்தினைப் பார்வையிட்டு, அதன் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். கால்பந்து மைதானத்தின் வெளிப்புறம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் தரைத் தளம், மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டு வரும் விளையாட்டு வளாக கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய நிழற்சாலையில் உள்ள சிறுவர் விளையாட்டுத் திடலில் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 1,120 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் சறுக்கு விளையாட்டு மைதானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த சறுக்கு விளையாட்டு மைதானத்தின் மூலம் எம்.கே.பி. நகர், சர்மா நகர், உதயசூரியன் நகர், சாமியார் தோட்டம், ஆர்.ஆர். நகர், எம்.ஜி.ஆர். நகர், தாமோதரன் நகர் பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் பயனடைவார்கள்.
பின்னர், சர்மா நகரில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டடம் புனரமைக்கும் பணிகளைப் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, மேற்கு அவென்யூ சாலையில் உள்ள மாநகர மின் பேருந்து பணிமனையினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின்போது, மண்டல அலுவலர் ஏ.ராஜ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.