

சென்னை,
செம்மஞ்சேரி முதல் பக்கிங்ஹாம் கால்வாய் வரை மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் செம்மஞ்சேரியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்க KfW நிதியின் கீழ், செம்மஞ்சேரி-அரசன் கழனி கால்வாயிலிருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வரை ரூ.184.88 கோடி மதிப்பீட்டில் 4,235 மீட்டர் நீளத்தில் OMR மற்றும் TNHB பிரதான சாலை வழியாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
செம்மஞ்சேரி-அரசன் கழனி கால்வாயிலிருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வரை ரூ.184.88 கோடி மதிப்பீட்டில் 4,235 மீட்டர் நீளத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியின் ஒரு பகுதியாக, நூக்கம்பாளையம் இணைப்புச் சாலை மற்றும் டி.என்.எச்.பி “ஏ” சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், ஐ.ஏ.எஸ்., இன்று (08.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணியினை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஈ.சி.ஆர். ப. சரவணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், ஐ.ஏ.எஸ்., ஆகியோர் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-192க்குட்பட்ட நீலாங்கரை கடற்கரைப் பகுதியில் பொது-தனியார் பங்களிப்புடன் புதிதாக கட்டப்பட்ட நவீன ஒப்பனை அறையினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்துப் பார்வையிட்டனர். இந்த நவீன கழிப்பறையில் ஆண்களுக்கான 4 கழிப்பறை இருக்கைகளும், பெண்களுக்கான 4 கழிப்பறை இருக்கைகளும், மாற்றுத்திறனாளிகளுக்கான 1 கழிப்பறை இருக்கையும் அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி ஆணையாளர், நீலாங்கரை கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், ஆணையாளர் நீலாங்கரை சாலையில் உள்ள சாலை மையத்தடுப்பில் பசுமைப் பரப்பினை அதிகரிக்கும் வகையில் நடப்பட்டுள்ள செடிகளைப் பார்வையிட்டு, தொடர்ந்து பசுமையாக பராமரித்திட நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது, தலைமைப் பொறியாளர் (மழைநீர் வடிகால்) டி.ஞானவேல், மேற்பார்வைப் பொறியாளர் (மழைநீர் வடிகால்) ஆர்.ஏ.பிரபாகர், மண்டல அலுவலர் ஜி.லோகேஸ்வரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.