சென்னை மாநகராட்சி ஒப்பந்தப் பணியில் மோசடி: தூய்மை பணியாளர் கைது!

தலைமறைவாக உள்ள மேற்பார்வையாளர் கார்த்திகேயனை போலீசார் தேடி வருகின்றனர்.
கைது
Published on: 

ஆலந்தூர்,

சென்னை மாநகராட்சி தனியார் ஒப்பந்த நிறுவனத்தில், வேலைக்கு வராத பெண்ணின் பெய ரில் சம்பளம் பெற்று மோசடி செய்ததாக தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மேற்பார்வையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூய்மைப் பணி

சென்னையை அடுத்த ஆலந்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம், சென்னை மாநகராட்சியின் 10-வது மண்டலம், 128-வது வார்டு சாலிகிராமம் பகுதியில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இங்கு கார்த்திகேயன் என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த 8-11-2025 முதல் 2-4-2026 வரை மகாலட்சுமி என்பவர் தூய்மை பணியாளராக வேலை செய்ததாக பதிவு செய்து, மாத சம்பளம் ரூ.19,800 வீதம் 5 மாதங்களுக்கு ரூ.98,930 அவரது மகன் பாண்டியன் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், மகாலட்சுமி ஒரு நாள்கூட பணிக்கு வரவில்லை என்றும், அரும்பாக்கத்தைச் சேர்ந்த அவரது மகன் பாண்டியன் (வயது 29) அதே நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருவதாகவும் நிறுவனத்தின் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

வழக்குப்பதிவு

இதுகுறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நிறுவனத்தின் வருகைப்பதிவேடு, சம்பள கணக்கு மற்றும் வங்கி விவரங்களை ஆய்வு செய்ததில், மேற்பார்வையாளர் கார்த்திகேயனும், தூய்மை பணியாளர் பாண்டியனும் இணைந்து மோசடியில் ஈடுபட்டதாகவும், இதற்காக கார்த்திகேயன் மாதந்தோறும் பாண்டியனிடம் கமிஷன் பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பாண்டியனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.40 ஆயிரம், 2 வங்கி பாஸ் புத்தகங்கள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேற்பார்வையாளர் கார்த்திகேயனை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com