சொத்து வரி செலுத்த டிசம்பர் 15-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு - சென்னை மாநகராட்சி

இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்த டிசம்பர் 15-ந் தேதி வரை காலஅவகாசத்தை நீட்டித்து பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சொத்து வரி செலுத்த டிசம்பர் 15-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு - சென்னை மாநகராட்சி
Published on

சொத்து வரி

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு செலுத்தப்படும் சொத்து வரியில் 5 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

2022-23-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொத்துவரி சீராய்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரி சீராய்வின்படி, சொத்து உரிமையாளர்களால் 1.10.22 முதல் செலுத்தப்பட்டு வருகிறது.

கால அவகாசம் நீட்டிப்பு

சொத்துவரி சீராய்வின்படி உயர்த்தப்பட்ட சொத்துவரியினை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியை தனி வட்டி இல்லாமல் செலுத்துவதற்கு 15.11.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதன்படி உயர்த்தப்பட்ட சொத்துவரியினை 5 லட்சத்து 92 ஆயிரம் சொத்து உரிமையாளர்கள் நிலுவை இல்லாமல் செலுத்தி உள்ளனர்.

சொத்து உரிமையாளர்களின் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்துவரியினை இதுநாள்வரை செலுத்தாதவர்கள், வட்டி இல்லாமல் செலுத்த அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதுவரை சொத்து வரியை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி டிசம்பர் 15-ந் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தி 2 சதவீத தனி வட்டியினை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com