

சென்னை,
சென்னை பள்ளிகளில் உள்ள பாலின மன்றங்களின் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமினை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், ஐ.ஏ.எஸ்., இன்று தொடங்கி வைத்தார். இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகத்தின் சார்பில் சென்னை பள்ளிகளில் உள்ள பாலின மன்றங்களின் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமினை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், ஐ.ஏ.எஸ்., இன்று (06.08.2026) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் தொடங்கி வைத்துப் பேசினார்.
இந்தப் பயிற்சி முகாமானது, இன்றும் (06.08.2026), நாளையும் (07.08.2026) இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் 211 சென்னை பள்ளிகளில் பாலின மன்றத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களுக்குப் பாலின உணர்திறன், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பாதுகாப்பான கற்றல் சூழலை உருவாக்குவதற்குத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் நடைமுறை உத்திகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
சென்னை பள்ளிகளில் மாணவர்களுக்கு வழிகாட்டுவதிலும், பாலின மன்றச் செயல்பாடுகளை முன்னெடுப்பதிலும் முக்கியப் பங்காற்றும் 211 பாலின மன்ற ஆசிரியர்கள் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றனர். பாலினச் சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கம், குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்புச் சட்டங்கள், பள்ளிப் பாதுகாப்பு, துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டல் தடுப்பு, இணையப் பாதுகாப்பு, பதின்ம வயதினரின் மனநலம், வாழ்க்கைத் திறன், கல்வி, பாலின உணர்திறன் சார்ந்த கற்பித்தல் முறைகள், அரசின் நலத்திட்டங்கள், பரிந்துரை வழிமுறைகள் மற்றும் பள்ளி வாரியான பாலின மன்ற ஆண்டு செயல் திட்டங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் கலந்துரையாடல் மூலம் விளக்கினார்கள்.
நிபுணர்களின் உரை, குழு விவாதங்கள், செயல்முறை விளக்கங்கள், பாத்திரமேற்று நடித்தல் மற்றும் செயல் திட்டமிடல் ஆகியவற்றின் மூலம் பங்கேற்பு அடிப்படையிலான அணுகுமுறையை ஏற்படுத்தும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இது ஆசிரியர்களின் தலைமைத்துவம் மற்றும் ஒருங்கிணைப்புத் திறன்களை வலுப்படுத்துவதோடு, மாணவர்களிடையே நேர்மறையான நடத்தை மாற்றங்களை ஊக்குவிக்கவும் உதவும்.
அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளிலும், பாலின மன்றத் திட்டத்தை ஒரே சீராகவும், திறம்படவும் செயல்படுத்துவதையும், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலின உணர்திறன் சார்ந்த நடைமுறைகளை வலுப்படுத்துவதையும், ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான பள்ளிச் சூழலை உருவாக்க ஆசிரியர்களை மேம்படுத்துவதையும் பெருநகர சென்னை மாநகராட்சி நோக்கமாகக் கொண்டு இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
இந்தப் பயிற்சி முகாமில், இணை ஆணையாளர் (கல்வி) கற்பகம், ஐ.ஏ.எஸ்., கல்வி அலுவலர் வசந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் முத்துச்செல்வி, லயோலா கல்லூரியின் சமூகப் பணித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சக்தி தேவி, மாநிலக் கல்லூரியின் அரசியல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வெங்கட சுப்ரமணியம், மாநகராட்சி பாலின மற்றும் கொள்கை ஆய்வகத்தின் குழுத் தலைவர் முனைவர் லெஜிஸ், பாலின கொள்கை வல்லுநர்கள், சென்னை பள்ளிகளின் பாலின மன்றங்களின் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.