சென்னையில் 18-ந்தேதிக்குள் மாடுகளுக்கு உரிமம் பெறாவிட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம் - மாநகராட்சி எச்சரிக்கை

உரிமம் பெற ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசம் வரும் 18-ந்தேதியுடன் முடிவடைகிறது.
சென்னையில் 18-ந்தேதிக்குள் மாடுகளுக்கு உரிமம் பெறாவிட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம் - மாநகராட்சி எச்சரிக்கை
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 22,875 மாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது அவை 25 ஆயிரம் வரையில் இருக்கலாம் என கருதப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான மாடுகள் உரிய இடவசதி இல்லாமல் சாலைகள் மற்றும் பொது இடங்களில் சுற்றித்திரிந்து வருகிறது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு, பொது சுகாதார சீர்கேடு, பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவங்களும் அதிகளவில் நடந்தது.

இதை கட்டுப்படுத்த 15 மண்டலங்களிலும் சாலையில் திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் பணியில் மாநகராட்சி தீவிரம் காட்டியது. கடந்த 2 ஆண்டுகளில் சாலையில் சுற்றித்திரிந்த 4,237 மாடுகள் பிரிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடமிருந்து ரூ.2.22 கோடி அபராதமாக விதிப்பட்டது. இதற்கிடையே, விலங்குகள் மற்றும் பறவைகள் வளர்ப்பினை முறைப்படுத்தும் வகையில் நாய்கள், பூனைகள், மாடுகள் உள்ளிட்டவைகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற வேண்டுமென மாநகராட்சி தெரிவித்தது.

இந்த நிலையில், சென்னையில் இதுவரையில் 750 மாடுகளுக்கு மட்டுமே உரிமம் பெற்று மைக்ரோசிப் பொருத்தப்பட்டுள்ளது. வரும் 18-ந்தேதிக்குள் மாடுகளுக்கு உரிமம் பெற்றிருக்க வேண்டுமென ஏற்கனவே மாநகராட்சி உத்தரவிட்ட நிலையில், 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளின் உரிமையாளர்கள் தங்களது மாடுகளுக்கு உரிமம் பெறவும், மைக்ரோசிப் பொருத்தவும் ஆர்வம் காட்டதாக நிலை உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'சென்னையில் 750 பேர் வரை மட்டுமே தங்களின் மாடுகளுக்கு உரிமம் பெற்றுள்ளனர். 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உரிமம் பெறவில்லை. உரிமம் பெற ஏற்கனவே வழங்கப்பட்ட 45 நாள் கால அவகாசம் வரும் 18-ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே, விரைவில் மாடுகளுக்கு மைக்ரோசிப் பொருத்தி உரிமம் பெற்றுக்கொள்ள உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். 18-ந்தேதிக்குள் தங்களது மாடுகளுக்கு உரிமம் பெறாத நபர்களுக்கு கடும் அபராதம் விதிக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது' என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com