

சென்னை,
சென்னை மாமன்ற கூட்டத்தில் 3 மாதங்களாக கவுன்சிலர் நிதி ஒதுக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநகராட்சி நிதி பற்றாக்குறை ரூ.1,970 கோடியாக உயர்ந்துள்ளதாக கமிஷனர் சமீரன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நேற்று. ஜூலை மாதத்திற்கான மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு, துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் சமீரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். தொடர்ந்து நேரமில்லா நேரத்தில் நிலைக்குழு தலைவர் சர்பஜெயதாஸ் பேசியதாவது:-
2026-27-ம் ஆண்டுக்கான கவுன்சிலர்கள் வார்டு மேம்பாட்டு நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை. புதிய அரசு பொறுப்பேற்று 3 மாதங்களாகியும் இதுவரை கவுன்சிலர் நிதி ஒதுக்கப்படவில்லை. கவுன்சிலர் மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படாமல் இருப்பதால் அடிப்படை பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை இதுவரை வழங்காததால் பல பணிகள் முடிக்கப்படாமல் இருக்கிறது. சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் இந்த நிலை இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் திட்டங்கள் அறிவித்தால் 60 நாட்களில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெறும். தி.மு.க. கவுன்சிலர்களை மக்களை குறை சொல்ல வேண்டும் என்று திட்டமிட்டே தற்போதைய ஆட்சியாளர்கள் நிதியை ஒதுக்கவில்லை.
பிப்ரவரி மாதத்துடன் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிகிறது. கவுன்சிலர் மேம்பாடு நிதி சென்னை மாநகராட்சி மூலதன நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. விரைந்து நிதி ஒதுக்க நகராட்சி நிர்வாக செயலாளரிடம் வலியுறுத்தப்படும்.
இதற்கு பதில் அளித்து கமிஷனர் சமீரன் பேசுகையில், 'சென்னை மாநகராட்சியின் மொத்த நிதி பற்றாக்குறை ரூ.1,970 கோடியாக உள்ளது. கவுன்சிலர்கள், பொதுமக்கள், மேம்பால பணிகள், வெள்ள தடுப்பு பணிகள் ஆகியவை மிக முக்கிய பணிகள் ஆகும். 2022-23-ம் ஆண்டு நிதி பற்றாக்குறை ரூ.325 கோடியாக இருந்தது. 2025-26-ம் ஆண்டு முடியும் போது அதாவது கடந்த மார்ச் மாதம் இறுதியுடன் நிதி பற்றாக்குறை ரூ.1,970 கோடியாக பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேலான பணம் நிலுவையில் உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் கவுன்சிலர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் நிதியை ரத்து செய்யவில்லை. அடுத்த 3 மாதங்களில் நிதி சூழலை பொறுத்து நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.