சென்னை மாநகராட்சியின் வாட்ஸ்அப் சேவை: 1.86 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்

வாட்ஸ்அப் செயலி வாயிலாக 1.86 லட்சத்திற்கும் அதிகமான பயனர் மாநகராட்சியின் சேவையினைப் பெற்று பயனடைந்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சியின் வாட்ஸ்அப் எண் செயலியின் வாயிலாக 1.86 லட்சத்திற்கும் அதிகமான பயனர் மாநகராட்சியின் சேவையினைப் பெற்று பயனடைந்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியின் சார்பில் மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறுவதற்கு ஏதுவாக 25.08.2025 அன்று முதல் வாட்ஸ்அப் செயலி சேவை வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மாநகராட்சியின் 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு Hi அல்லது வணக்கம் என்ற குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் 12-க்கும் மேற்பட்ட மொழிகளில் 44 சேவைகளை எளிதில் பெற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த வாட்ஸ்அப் செயலி மூலம் சொத்து வரி, தொழில் வரி, வணிக வரி, வணிக வளாக வாடகை, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்கள் செலுத்துதல், வணிக உரிமம் மற்றும் விளம்பரப் பேனர்கள் உரிமம், முதல்வர் படைப்பகம், மெரினா நீச்சல் குளம், சமூகக் கூடம், ரிப்பன் கட்டடத்தில் மரபு நடைபயணம், வீடுகள்தோறும் தேவையற்ற சோபா மற்றும் மெத்தை கழிவுகள் பெறுதல், கட்டடம் மற்றும் கட்டுமானக் கழிவுகள் உள்ளிட்ட சேவைகளுக்கான முன்பதிவுகளும், கட்டட வரைபடத்திற்கான நகரத் திட்டமிடல், பிறப்பு/இறப்புச் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல், குழந்தையின் பெயர் சேர்த்தல், புகார் தெரிவித்தல் மற்றும் தகவல் சேவைகள் ஆகிய சேவைகளின் கீழ் மொத்தம் 44 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்குத் தடையற்ற சேவையை வழங்க, இந்தத் தளம் செயற்கை நுண்ணறிவை (AI) நேரடிப் பணியாளர் உதவியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக சிக்கலான கோரிக்கைகள் விரைவான தீர்வுக்காக தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த வாட்ஸ்அப் செயலியினை பொதுமக்கள் 24×7 மணிநேரமும் தொடர்பு கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி நாள்தோறும் 600 முதல் 1,000 வரையிலான பிறப்புச் சான்றிதழ்கள் வாட்ஸ்அப் செயலி வாயிலாக பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் காகிதமில்லா பயன்பாட்டினை சாத்தியமாக்குவதோடு, மக்களுக்கு தாமதமின்றியும், எவ்வித அலைச்சலுமின்றியும் எளிதில் சேவைகள் வழங்கப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி வாட்ஸ்அப் தளம் தொடங்கப்பட்டதிலிருந்து பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று ஒரு டிஜிட்டல் சேவைத் தளமாக செயல்பட்டு, 2.14 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் பதிவு செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதில் 1.86 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களுக்குத் தேவைப்படுகின்ற மாநகராட்சியின் சேவையினைப் பெற்று பயனடைந்துள்ளனர். மேலும், ஒருங்கிணைந்த கட்டணச் சேவைகள் மூலமாக ரூ.43.76 கோடி வருவாய் மாநகராட்சிக்கு பெறப்பட்டுள்ளது.

இந்த வாட்ஸ்அப் தளம், பொதுமக்களுக்கு மாநகராட்சியின் சேவைகளை பெறுவதற்கு ஒற்றை, பாதுகாப்பான, பன்மொழி மற்றும் செயற்கை நுண்ணறிவு வசதி கொண்ட ஒரு சேவையாக மக்களுக்கு பயனளித்து வருகிறது. பொதுமக்கள் சென்னை மாநகராட்சியின் இந்த வாட்ஸ்அப் செயலியினைப் பயன்படுத்தி மாநகராட்சியின் 44 சேவைகளை எளிதில் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com