சென்னை டி.பி.ஐ. வளாகம் முன்பு உண்ணாவிரதம் இருந்த 1400 இடைநிலை ஆசிரியர்கள் கைது ராஜரத்தினம் மைதானத்தில் தங்கவைப்பு

சென்னை டி.பி.ஐ. வளாகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் உண்ணா விரதத்தை தொடங்கினர். இதைத்தொடர்ந்து 1,400 பேரை போலீசார் கைது செய்து, ராஜரத்தினம் மைதானத்தில் தங்கவைத்தனர்.
சென்னை டி.பி.ஐ. வளாகம் முன்பு உண்ணாவிரதம் இருந்த 1400 இடைநிலை ஆசிரியர்கள் கைது ராஜரத்தினம் மைதானத்தில் தங்கவைப்பு
Published on

சென்னை,

சமவேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும், 7-வது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தை அறிவித்தனர். உண்ணாவிரதம், அதிகளவு ரத்த தானம், உடல் உறுப்பு தானம் என்று போராட்டத்தை நீட்டிப்பது என்றும் தீர்மானித்திருந்தனர்.

இந்தநிலையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க பிரதிநிதிகளுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் செயலாளர் உள்பட அதிகாரிகள் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நேற்றுமுன்தினம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அன்றைய தினம் நடக்க இருந்த டி.பி.ஐ. வளாகம் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

இந்தநிலையில் 2-ம் நாளாக அமைச்சர் மற்றும் செயலாளருடன் இடைநிலை ஆசிரியர்கள் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை தலைமை செயலகத்தில் நேற்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உங்கள் போராட்டத்தை வருகிற ஜனவரி 7-ந்தேதி வரை ஒத்திவைக்க வேண்டும், என்றும் அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஆனால் முதல்-அமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும் என்றும், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என்றும் இடைநிலை ஆசிரியர்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து உடனடியாக போராட்டத்தை முன்னெடுப்பதாக இடைநிலை ஆசிரியர் பிரதிநிதிகள் அறிவித்தனர்.

இதையடுத்து டி.பி.ஐ. வளாகம் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்று எனும் கோஷத்துடன் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர். குடும்பம் குடும்பமாகவும், குழந்தைகளுடனும் ஏராளமானோர் பங்கேற்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை அவர்கள் கைவிடவில்லை. பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்ட போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் உடன்பாடு ஏற்படவில்லை.

அதனைத்தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக அங்கிருந்து போலீஸ் வேனில் ஏற்றினர். பின்னர் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அவர்கள் அடைக்கப்பட்டனர். ஆனாலும் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்தபடியே அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

முன்னதாக இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் குறித்த தகவல் அறிந்து டி.பி.ஐ. வளாகத்தின் 3 நுழைவுவாயில்களையும் போலீசார் அடைத்தனர். அந்தவழியாக போக்குவரத்தும் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டது.

இதனால் டி.பி.ஐ. வளாகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை நேற்று இரவு பரபரப்பாக காணப்பட்டது. இந்த போராட்டத்தில் 500 ஆசிரியைகள் உள்பட 1,400 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com