

சென்னை,
சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் கன்டெய்னர் யார்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் டிரைவர் பிணமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் அருகே உள்ள தனியார் கன்டெய்னர் யார்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில், டிரைவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த காவலாளி உள்ளே சென்று பார்த்தபோது, டிரைவர் இருக்கையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார், டிரைவர் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். விசாரணையில், இறந்தவர் விழுப்புரத்தைச் சேர்ந்த வேலு (வயது 40) என்பதும், கடந்த ஞாயிற்றுக்கிழமை சரக்கு ஏற்றி வந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் உடல்நலக்குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.