

சென்னை,
கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் இன்று அவசரகால தயார்நிலை ஒத்திகை நடைபெற்றது.
இந்திய அணு சக்தி கழகத்தின் கீழ் இயங்கும் சென்னை அணு மின் நிலையம் (MAPS), இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR), முன்மாதிரி அதிவேக ஈனுலை (பாவினி அணுமின் திட்டம்), மற்றும் கல்பாக்கம் அணு மறுசுழற்சி வாரியத்தின் (NRB) பிரிவுகள் ஆகியவற்றில் அவசர கால தயார் நிலை ஒத்திகை இன்று (20 நவம்பர்) நடத்தப்பட்டது.
ஒத்திகையின் முக்கிய அம்சங்கள்
கல்பாக்கம் வளாக அவசரநிலை நிர்வாகக் குழுவின் இயக்குனரும், சென்னை அணுமின் நிலைய இயக்குனருமான செல்வகுமரன் தலைமையில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் 7,100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.
ஊழியர்களை பாதுகாப்பான கட்டிடங்களில் தங்க வைத்தல், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தல், கதிர்வீச்சு மாசுபட்ட வாகனங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட செயல்முறைகள் சோதிக்கப்பட்டன.
அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் (AERB) விதிமுறைகளின்படி அவசரகால தயார்நிலையை உறுதி செய்வதும், அவசர நிலையை எதிர்கொள்ளும் திறனை மதிப்பிடுவதும் இந்த ஒத்திகையின் நோக்கமாகும். பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட அணு உலையில் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக குறைவு என்றாலும், தயார்நிலையை சோதிக்க இத்தகைய ஒத்திகைகள் நடத்தப்படுகின்றன.