

சென்னை,
சென்னை திருவிக நகரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பால், பிரெட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
கடந்த ஆட்சியில் நீர்வழித்தடம் மற்றும் வடிகால்களை அ.தி.மு.க. அரசு தூர் வாரியதால் தான் சென்னை கனமழையில் இருந்து தப்பியது. இல்லையென்றால் இன்னும் சென்னை மோசமான நிலைக்கு உள்ளாயிருக்கும். வடிகால் மற்றும் வரத்து வாய்க்கால்களை திமுக அரசு முறையாக கவணிக்கவில்லை.
சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசும் சூழல் உள்ளது. கண் துடைப்புக்காக ஒருசில இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகின்றன. திமுக அரசு மெத்தன போக்காக உள்ளது. எதிர் கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும் அதிமுக-வை குறைசொல்வதே திமுக-வின் வேலை.
இவ்வாறு அவர் கூறினார்.