வெள்ளத்தில் மிதக்கும் சென்னை...! வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்...! பரிதவிக்கும் மக்கள்

சென்னையில் கடந்த 6-ந்தேதி இரவு தொடங்கிய கனமழை விடிய விடிய பெய்து வெள்ளக்காடாக்கியது. ஒரே நாளில் பெய்த மழையால் சென்னை நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது.
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை...! வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்...! பரிதவிக்கும் மக்கள்
Published on

சென்னை:

மழைநீர் கால்வாய்கள் நிரம்பி சாலைகளிலும், மழைநீர் சூழ்ந்தது. மணலி, திரு.வி.க.நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

கொரட்டூர், கொளத்தூர் ஜி.கே.எம். காலனி, பூம்புகார் நகர், பெரவலூர், புளியந்தோப்பு, மேற்கு மாம்பலம் ஆகிய முக்கிய பகுதிகளில் தேங்கிய மழைநீரை இன்னும் வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளதால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வடசென்னை பகுதிகளான ராயபுரம், திருவொற்றியூர், தண்டயார்பேட்டை, காசிமேடு, கொருக்குபேட்டை, பெரம்பூர், புளியந்தோப்பு வியாசர்பாடி, ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பெரம்பூர் கே.எம். கார்டன் அருகே உள்ள 15 தெருக்களில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

திரு.வி.க.நகர் பகுதியில் மழைநீர் சாலைகளில் குளம் போல் தேங்கியுள்ளன. கொருக்குப்பேட்டை, சிவாஜி நகர், அஜீஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால் உடைமைகள் முழுவதும் சேதமடைந்துள்ளன.

தண்டையார்பேட்டையில் சூழ்ந்துள்ள மழைவெள்ளம் காரணமாக பொதுமக்கள் கழிப்பிடம் செல்லக்கூட வழியில்லாமல் அவதியுற்று வருகின்றனர்.

வேளச்சேரி, பள்ளிக்கரணை, புழுதிவாக்கம், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் பாம்புகள், தவளைகள், பூரான்கள் உள்ளிட்ட பூச்சிகளும் அழையா விருந்தாளியாக வந்து கூடுதல் தொல்லையை அளித்து வருகின்றன. இதனால் என்ன செய்வது? என்ற குழப்பத்திலேயே மழைநீரில் தவிப்புடன் மக்கள் தத்தளித்து வருகிறார்கள். எப்போது மழைநீர் வடியும், இயல்பு நிலை எப்போது திரும்பும்? என்ற எதிர்பார்ப்புடனேயே ஒவ்வொரு நாளையும் கடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கும், மழைக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின் போது சென்னை மக்கள் படும் துயரம் சொல்லி மாளாது. ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கால தொடக்கமே மக்களுக்கு நிம்மதியை கெடுப்பதாய் அமைந்து போனது. இன்னும் அதி கனமழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியாகி இருப்பதால் வரும் நாட்கள் எப்படி இருக்கப்போகிறதோ? என்ற கலக்கத்தில் மக்கள் புலம்பி கொண்டிருக்கிறார்கள். தற்போதைய சூழலில் நீர் திவலைகளுக்கு மத்தியில் நீர் நகரமாகவே சென்னை மாறி போயிருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com