சென்னை: பல்லாவரம் அருகே மயான ஊழியர் படுகொலை

திருடிய செல்போன் ஒன்றை ஆகாஷ் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தது தொடர்பாக நண்பர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: பல்லாவரம் அருகே மயான ஊழியர் படுகொலை
ஆகாஷ்
Published on: 

சென்னை,

சென்னை பல்லாவரம் அருகே திருடிய செல்போனை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், இளைஞர் ஒருவர் தனது நண்பர்களாலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறுதி ஊர்வலத் தொழிலாளர்கள்

சென்னை பல்லாவரம் அஸ்தினாபுரம், நாகத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 25). மயான ஊழியரான இவர், இறுதி ஊர்வலங்களில் மேளம் அடிக்கும் தொழிலையும் செய்து வந்தார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களான குரு மற்றும் விமல்ராஜ் ஆகியோரும் இணைந்து மேளம் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதம்

இவர்கள் 3 பேரும் இறுதி ஊர்வலங்களில் கலந்துகொண்டு மதுபோதையில் இருப்பவர்களிடம் இருந்து செல்போன்களைத் திருடி, அவற்றை விற்று பணத்தைப் பங்கு போடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) இரவு இறுதி ஊர்வலப் பணியை முடித்துவிட்டு, 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, திருடிய செல்போன் ஒன்றை ஆகாஷ் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தது தொடர்பாக நண்பர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வெட்டிக் கொலை

மதுபோதையில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த குரு மற்றும் விமல்ராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து, தாங்கள் வைத்திருந்த சிறிய கத்தியால் ஆகாஷை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஆகாஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.

போலீசார் நடவடிக்கை

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லாவரம் போலீசார், ஆகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலையில் தொடர்புடைய குருவைக் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நண்பரான விமல்ராஜைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

X