அலட்சியத்தால் கோவில் சொத்துக்கள் பறிபோயுள்ளன - அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு கண்டனம்

கோவில் சொத்துகளை பாதுகாக்க சம்பளம் வாங்கி கொண்டு அறநிலையத் துறை அதிகாரிகள் பணி செய்யாமல் துரோகம் செய்வதா? என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
அலட்சியத்தால் கோவில் சொத்துக்கள் பறிபோயுள்ளன - அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு கண்டனம்
Published on

சென்னை,

சேலம் மாவட்டம் ஓமலூர் கண்ணனூர் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகவும், கோவிலுக்கு சொந்தமான கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாகவும் சேலத்தைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த வாரம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கில் நேரில் ஆஜராகுமாறு சேலம் இந்து அறநிலையத்துறை இணை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று காலை மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி நேரில் ஆஜரானார்.

வழக்கு விசாரணையின்போது, கோவில் சொத்துக்களை பாதுகாப்பதற்காக சம்பளம் வாங்குகிறீர்கள்.. ஆனால், அந்த பணியை சரிவர செய்யாமல், அதற்கு துரோகம் செய்கிறீர்கள் என அதிகாரிகளின் அலட்சியப் போக்கிற்கு நீதிபதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்தது.

மேலும், அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியங்களினால் ஏராளமான கோவில் சொத்துக்கள் பறிபோயுள்ளன என்றும், இவ்வாறான அலட்சியங்களை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்த நீதிமன்றம், இவைகளின் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் நடைபெற்றுள்ள கனிம வள கொள்ளைகளுக்கு உரிய இழப்பீடுகள் வசூலிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com