

சென்னை,
தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக இருந்த நிபுணர் குழு உறுப்பினர் பணியிடத்தில், தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற கிரிஜா வைத்தியநாதனை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் அவருக்கு சுற்றுச்சூழல் சம்பந்தமாக உரிய அனுபவம் இல்லாத காரணத்தால், அவரது பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின்படி, நிபுணர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு 15 ஆண்டுகள் நிர்வாகப்பணி அனுபவமும், 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும். ஆனால் கிரிஜா வைத்தியநாதனுக்கு அதுபோன்ற அனுபவம் இல்லாததால், அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கிரிஜா வைத்தியநாதன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அவர் தலைமைச் செயலாளராக பணியாற்றியதற்கு முன்பு வகித்த பதவிகள் பட்டியலிடப்பட்டிருந்தன. அதன்படி கிரிஜா வைத்தியநாதன் சுற்றுச்சூழல் சார்ந்த துறைகளில் மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்ததாகவும், அது தொடர்பான அனுபவம் பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தலைமை நீதிபதி அமர்வு இதனை ஏற்க மறுத்துவிட்டது. கிரிஜா வைத்தியநாதன் 3 ஆண்டு 6 மாதங்கள் மட்டுமே சுற்றுச்சூழல் சார்ந்த துறைகளில் பதவி வகித்திருப்பதால், அந்த அனுபவம் போதாது என்றும், அவரது நியமனம் திருப்திகரமாக இல்லை என்றும் தெரிவித்த நீதிபதிகள் கிரிஜா வைத்தியநாதனின் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
இருப்பினும் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி கிரிஜா வைத்தியநாதன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக பதிவி ஏற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.