கோவில் திருவிழாவிற்கு அனுமதி அளிக்கும் விவகாரம்; காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை

திருவிழாவிற்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை 7 நாட்களில் பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கோவை மாவட்டம் பாப்பம்பட்டியில் உள்ள வீரமாத்தி அம்மன் கோவிலில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆடிபெருந்திருவிழா நடத்த இருப்பதாகவும் இந்த திருவிழாவில் ஒலிப்பெருக்கி பயன்படுத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு சுரேஷ் குமார் என்பவர் சூலூர் காவல் நிலையத்தில் மனு கொடுத்து இருந்தார்.
கடந்த ஜூலை 7 ஆம் தேதி கொடுத்த விண்ணப்பத்தின் மீது இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் சுரேஷ் குமார் என்பவர் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு காவல்துறையினருக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
திருவிழாவிற்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை 7 நாட்களில் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள சென்னை ஐகோர்ட்டு, விண்ணப்பங்களை பரிசீலிக்காததால் திருவிழாவிற்கு வசூலித்த நிதிகள் வழக்கு செலவுக்கு பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது.
கடைசி நேரத்தில், நீதிமன்றத்தை நாடச் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் . கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரி நீதிமன்றத்தை நாட செய்தால் சம்மந்தப்பட்ட அதிகாரியே விழா செலவுகளை ஏற்க வேண்டி வரும் என்றும் தெரிவித்துள்ளது.






