சென்னை: விமானத்தில் கடத்தி வந்த உயர்ரக கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது

தாய்லாந்தில் இருந்து சென்னை வரும் விமானத்தில் பெருமளவு போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சென்னை: விமானத்தில் கடத்தி வந்த உயர்ரக கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
Published on

சென்னை,

தாய்லாந்தில் இருந்து சென்னை வரும் விமானத்தில் பெருமளவு போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில், சுற்றுலா விசாவில் சென்று திரும்பிய 26 வயதுள்ள வாலிபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அழகு சாதன பொருட்களுக்குள் காற்று புகாதவாறு மறைத்து வைக்கப்பட்டிருந்த 868 கிராம் ஹைட்ரோபோனிக் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல் தாய்லாந்தில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்த 30 வயதுள்ள வாலிபரை அதிகாரிகள் சோதனையிட்டனர். பட்டதாரியான அவர், வேலையில்லாத காரணத்தால் கடத்தல் கும்பலுக்கு 'குருவியாக' செயல்பட்டது தெரியவந்தது. அவரது சூட்கேசில் இருந்த உணவு பொட்டலங்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த 900 கிராம் உயர்ரக கஞ்சாவையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட வாலிபரிடம் நடத்திய விசாரணையில், இந்த போதைப்பொருள் பொட்டலங்களை விமான நிலையத்துக்கு வெளியே காத்திருக்கும் நபர்களிடம் ஒப்படைத்தால் பணம் தருவதாக கடத்தல் கும்பல் கூறியதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்துக்கு வெளியே கஞ்சாவை வாங்குவதற்காக காத்திருந்த 2 பேரை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இந்த கடத்தல்களுக்கு பின்னால் மூளையாக செயல்படும் கும்பல் குறித்தும், வெளிநாடுகளில் உள்ள தொடர்புகள் குறித்தும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com