

சென்னை,
சென்னை கத்திப்பாரா சந்திப்பில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 3 வழித்தடங்களில் ஒரே நேரத்தில் 6 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
11 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. அப்போது கத்திப்பாரா மேம்பாலத்தின் மேலே மெட்ரோ ரெயில் சென்ற காட்சி பயணிகளைப் பெரிதும் கவர்ந்தது.
தற்போது கத்திப்பாரா சந்திப்பில் மெட்ரோ ரெயில் சேவை மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன்படி, முதல் கட்ட மெட்ரோ திட்டத்தின் 2 வழித்தடங்கள் மற்றும் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தின் ஒரு வழித்தடம் என மொத்தம் 3 வழித்தடங்களில் 6 ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
118.9 கிலோமீட்டர் கொண்ட இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தின் பாதையில், 108 அடி உயர தூண் மற்றும் 125 மீட்டர் ஆரம் கொண்ட வளைவு வழியாக ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதில் மாதவரத்தில் இருந்து ஆலந்தூர் வழியாக சோழிங்கநல்லூர் வரை செல்லும் 5-வது வழித்தடத்தில், கோயம்பேடு-ஆலந்தூர் இடையே 14.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பாதை அமைக்கப்படுகிறது.
கத்திப்பாரா சந்திப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பேலன்ஸ்டு கேன்டிலீவர்' எனப்படும் சமநிலைத் தாங்கி பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. பால் வெல்ஸ் சாலையில் இருந்து ஆலந்தூர் வரை 413 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் தூண்கள் 88 அடி முதல் 108 அடி உயரம் கொண்டவை.
தற்போது இந்தப் பாலத்தில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இப்பணிகள் 45 நாட்களில் நிறைவடையும் என்றும், அடுத்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் ரெயில் சோதனை ஓட்டம் தொடங்கும் என்றும் மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொடர்ந்து, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே நிறைவடைய வேண்டியிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. குறிப்பாக, முதல் கட்ட மெட்ரோ பாதைக்கு மிக அருகில் பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்ததாலும், பணிகளுக்கு குறைந்த நேரமே அனுமதிக்கப்பட்டதாலும் சவால்கள் ஏற்பட்டன.
மேலும், கத்திப்பாரா மேம்பாலத்தின் மேல் ஒவ்வொரு பாலப் பகுதியையும் அங்கேயே கட்ட வேண்டியிருந்தது. செங்குத்தான வளைவு அமைப்பில் பாலம் அமைக்கப்பட்டதால், கான்கிரீட் பகுதிகளை இணைக்கும் பணிகளிலும் சிரமம் ஏற்பட்டது.
இதுதவிர, உயர் அழுத்த மின்கம்பிகள் மற்றும் முதல் கட்ட மெட்ரோவின் மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றதால் மின் தூண்டல் பிரச்சினையும் ஏற்பட்டது. இதனால், தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை முதல் கட்ட மெட்ரோவின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு, அந்த 4 மணி நேரத்தில் மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.