

சென்னை,
"தனியாக வராதீர்கள், கூட்டமாக வந்து பாருங்கள்" என உறவினர்களுக்கு 'வாட்ஸ்அப்'பில் மெசேஜ் அனுப்பி விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த ஜீவா என்பவரது மகன் அன்பரசு (27 வயது). இவர், சென்னை ஆவடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு, அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் பக்தவச்சலம் தெருவில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். தனிமையில் வசித்து வந்த அன்பரசு, தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை சென்னையில் வசிக்கும் தனது சித்தப்பா ராஜகுரு மற்றும் உறவினர்களுக்கு 'வாட்ஸ் அப்' மூலம் "தனியாக வராதீர்கள், கூட்டமாக வந்து என்னை பாருங்கள்" என மெசேஜ் அனுப்பினார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜகுருவும், அவரது மனைவியும் உடனடியாக அன்பரசு தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றனர். அங்கு அன்பரசு, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அன்பரசு உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அன்பரசுவின் சகோதரி பிரபாவதி அளித்த புகாரின் பேரில் போலீசார் tவழக்குப்பதிவு அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.