

பூண்டி ஏரியின் உபரிநீர்
ஆந்திராவில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பூண்டி ஏரிக்கு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி வீதம் உபரி நீர் நேற்று முன்தினம் திறந்து விடப்பட்டது. எனவே கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கொசஸ்தலை ஆற்றின் வெள்ள நீர் ஓட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
பெருநகர சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்துக்கு உட்பட்ட மணலி புதுநகர் பகுதியும் கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. எனவே மணலி புதுநகர் பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் கொசஸ்தலை ஆற்றின் வெள்ளநீர் நேற்று ஊருக்குள் புகுந்தது. மணலி புதுநகர் பகுதிகளில் உள்ள வடிவுடையம்மன் நகர், ஜெனிபர் நகர், காந்தி நகர், ஆர்.எஸ்.நகர், மகாலட்சுமி குடிசைப்பகுதிகள், சடையான்குப்பன் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது.
தரை பாலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மணலி புதுநகர் பகுதியில் உள்ள கன்டெய்னர் யார்டுகள் குளம் போன்று மாறி உள்ளன. லாரிகள், கன்டெய்னர் போன்ற கனரக வாகனங்கள் வெள்ளநீரில் சிக்கி உள்ளன. கொசஸ்தலை ஆற்றங்கரையோரத்தை சுற்றி உள்ள பகுதிகளில் எங்கு பார்த்தாலும் தண்ணீராக காட்சி அளிக்கிறது. மாடி வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே தஞ்சம் அடையும் நிலைமை ஏற்பட்டு உள்ளது. தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் மாநகராட்சி நிவாரண முகாம்களில் அடைக்கலம் புகுந்து உள்ளனர். கால்நடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
ஆர்ப்பரித்து செல்கிறது
சென்னையில் கடந்த 6-ந்தேதி பெய்த பெருமழையில் அதிகம் பாதிப்புக்கு உள்ளான இடங்களில் மணலி மண்டலமும் இடம் பெற்றிருந்தது. அப்போது தேங்கிய மழைவெள்ளநீர் நீண்ட நாட்களுக்கு பின்னர் வடிந்து இயல்பு நிலை மெல்ல, மெல்ல திரும்பி வந்தது.
இந்தநிலையில் கொசஸ்தலை ஆற்றின் வெள்ளப்பெருக்கால் மணலி புதுநகர் பகுதி மீண்டும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தனித்தீவு போன்று காட்சி அளிக்கிறது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த காட்சியை பார்ப்பதற்காக சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.
கொசஸ்தலை ஆறு கடந்து செல்லும் நாப்பாளையம் மேம்பாலத்தில் நின்று ஆபத்தை உணராமல் வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்வதை மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து ஆச்சரியத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர். வேடிக்கை பார்க்கும் ஆர்வத்தில் தவறி விழுந்தால் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்பதை மக்கள் உணர வேண்டும். எனவே வெள்ளநீரை வேடிக்கை பார்ப்பதற்காக யாரும் வரக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கடலில் கலப்பு
கொசஸ்தலை ஆற்றில் இருந்து வெளியேறும் வெள்ளநீர் கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கன்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனூர், ஜெகநாதபுரம், புதுக்குப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அருவன்பாளையம், சீமாவரம், வெல்லிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையன்சாவடி, மணலி, மணலி புதுநகர் சடையான்குப்பம், எண்ணூர் வழியாக கடலில் சென்று கலக்கிறது.
பூண்டி ஏரியில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த வேளையில் நேற்று பகலில் 23 ஆயிரத்து 500 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மீட்பு பணி
பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் மணலி புதுநகர், சடையான்குப்பம், பரமா நகர், விச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவு போல் தண்ணீர் மிகவும் சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியவசிய பொருட்கள் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.
இதையடுத்து அந்த பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள், போலீசார், தீயணைப்பு துறையினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் படகு மூலம் அப்பகுதியில் உள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சடையான்குப்பம்-திருவற்றியூர் இடையே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாலும், மழைநீர் சூழ்ந்ததாலும் அங்குள்ள மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.