சென்னை மாரத்தான்: மெட்ரோ ரெயில் சேவைகள் நாளை அதிகாலை 3 மணி முதல் இயக்கப்படும்

மாரத்தான் பங்கேற்பாளர்கள், ஸ்பான்சர் செய்யப்பட்ட சிறப்பு (QR) குறியீடு பயணசீட்டை பயன்படுத்தி பயணிக்கலாம்.
சென்னை,
சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சென்னை மாரத்தான் நிகழ்வை முன்னிட்டு வருகின்ற 04.01.2026, அன்று மெட்ரோ ரெயில் சேவைகள் அதிகாலை 3 மணி முதல் இயக்கப்படும்.
சென்னை மாரத்தான் - 2026 நிகழ்வு வருகின்ற 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது. மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், The Chennai Runners Association உடன் இணைந்து, பங்கேற்பாளர்களுக்கு தடையற்ற பயணத்தை வழங்குவதற்காக, நிகழ்ச்சி நடைபெறும் நாளான 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சிறப்பு ஏற்பாடாக சென்னை மெட்ரோ ரெயில் சேவை நீடிக்கப்பட்டு முன்கூட்டியே அதிகாலை 3:00 மணி முதல் இயக்கப்படும்.
பொதுமக்கள் கவனத்திற்கு:
- மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
- அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை வழித்தடமாற்றத்திற்கான (Inter-Corridor) ரெயில் சேவை வழங்கப்படாது.
- காலை 5.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின்படி வழக்கமான மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்படும்.
- மாரத்தான் பங்கேற்பாளர்கள், ஸ்பான்சர் செய்யப்பட்ட சிறப்பு (QR) குறியீடு பயணசீட்டை (நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் BIB உடன் வழங்கப்பட்ட) பயன்படுத்தி 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து ஒரு சுற்று பயணம் மட்டும் (இரு நுழைவு இரு வெளியேறு) பயணிக்கலாம்.
- வாகன நிறுத்துமிடத்தில் இந்த (QR/BIB) குறியீட்டை பயன்படுத்தி பங்கேற்பாளர்கள் அன்று மட்டும் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம்.
மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






