சோழிங்கநல்லூரில் 22 குளங்களை தூர்வாரும் பணி - சென்னை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்


சோழிங்கநல்லூரில் 22 குளங்களை தூர்வாரும் பணி - சென்னை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
x

குளங்களை தூர்வாரி கொள்ளளவை அதிகரித்து மேம்படுத்தும் நீர் மேலாண்மைப் பணிகளை மேயர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“வளசரவாக்கம் மண்டலம் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் இரண்டு பாலங்கள், தியாகராயநகர் தெற்கு உஸ்மான் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் ஆகியவற்றினை இன்று (06.09.2025) மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் ரெட்டைக்குட்டை தாங்கல் குளம் உள்ளிட்ட 22 குளங்களில் தூர் வாரி மேம்படுத்தும் பணிகளைத் தொடங்கி வைத்து, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

வளசரவாக்கம் மண்டலம், சன்னதி தெருவில் கூவம் ஆற்றின் குறுக்கே பூந்தமல்லி நெடுஞ்சாலையினையும் யூனியன் சாலையினையும் இணைக்கும் வகையில் ரூபாய் 31.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர் மட்டப் பாலத்தினையும், சின்ன நொளம்பூரில் பூந்தமல்லி நெடுஞ்சாலையினையும் யூனியன் சாலையினையும் இணைக்கும் வகையில் ரூபாய் 42.71 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலத்தின் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, மேயர் பிரியா, கோடம்பாக்கம் மண்டலத்தில் ரூபாய் 162.92 கோடி மதிப்பீட்டில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். போக்குவரத்துக்கு இடையூறின்றி பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு 200-ல் ரெட்டைக்குட்டை தாங்கல் குளம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சோழிங்கநல்லூர், பெருங்குடி, அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் ரெட்டைக்குட்டை தாங்கல் குளம் உள்ளிட்ட 22 குளங்களை தூர்வாரி கொள்ளளவை அதிகரித்து மேம்படுத்தும் நீர் மேலாண்மைப் பணிகளை மேயர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் 22 குளங்களை மறுசீரமைப்பதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் வாயிலாக (Environmentalist Foundation of India) இந்த 22 குளங்களில் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. பெருங்குடி மண்டலத்தில், (மண்டலம் 14) தாமரைக்குளம், அமர குளம், கிளிஞ்சல் குளம், மாடம்பாக்கம் குளம் -1, மாடம்பாக்கம் குளம் -2.

சோழிங்கநல்லூர் மண்டலத்தில் (மண்டலம் 15), ஷாலிமர் தோட்டம் 2வது தெரு குளம், பெரிய கேணிக்குளம், கண்ணகி நகர் 17வது பிரதான வீதி குளம், உழவர்கேணி தாங்கல் குளம், அல்லிக்குளம், பிள்ளையார் கோவில் விக்கினிக்குளம் கேணிகுளம், புதுச்சேரி கேணி, வண்ணான் குளம், ராமன் தாங்கல் ஏரி, ராஜீவ் காந்தி நகர் குளம், பெரிய தாமரைக்குளம், தாங்கல் ஏரி, ரெட்டை குட்டை தாங்கல் குளம்.

அம்பத்தூர் மண்டலத்தில் (மண்டலம் 7), அர்ரகுளம் ஆகிய 22 குளங்களை இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் (Environmentalist Foundation of India) வாயிலாக சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த பணியில் குளங்களில் உள்ள ஆகாயத்தாமரை அகற்றுதல், பறவைகளுக்கான தீவுகள் அமைத்தல், மரங்கள் நடுதல், சூரிய சக்தியில் இயங்கும் நீரூற்று, நடைபாதை, மின்விளக்கு வசதி, சுற்றிலும் வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த குளங்களை புனரமைப்பதன் மூலம் நீர் கொள்ளளவு அதிகரித்திடும். மேலும், இப்பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து பயனளித்திடும்.

முன்னதாக, ராமன் தாங்கள் எரி, தாங்கல் ஏரி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒக்கியம் மடு கால்வாயில் தற்போது, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தினால் கட்டப்பட்டுவரும் பாலத்தின் வழியே மழைக்காலத்தில் தங்குதடையின்றி நீர் செல்வதை உறுதி செய்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு 199 நெடுஞ்செழியன் சாலையில் (ஓ எம் ஆர் சாலையில்) உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிகவளாகப்பகுதியில் பல்வேறு வசதிகளுடன் புதிய வணிக வளாகம் அமைப்பது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, செம்மஞ்சேரி உப்பு வாரியத்தின் நிலப்பகுதியில் உள்ள குடியிருப்பில் உள்ள மக்களின் கோரிக்கையின்படி குடிநீர் வழங்குதல் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவது தொடர்பாக அப்பகுதியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story