சென்னை: ரூ.1.38 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் மேயர் பிரியா

மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களி வளர்ச்சித் திட்டப்பணிகளை மேயர் பிரியா இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
மேயர் ஆர்.பிரியா, மணலி மண்டலம், வார்டு-15, மணலி புதுநகர் 80 அடி சாலையில் மேயரின் சிறப்பு மேம்பாட்டுத் திட்ட நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் நவீன உடற்பயிற்சிக் கூட கட்டுமானப் பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மணலி மண்டலத்தில் பசுமைப் பரப்பினை அதிகரிக்கும் வகையில், மகாலட்சுமி நகர் பகுதியில் உள்ள சி.எம்.டி.ஏ. கால்வாய் அருகில் மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து, சி.எம்.டி.ஏ. கால்வாயில் தூர்வாரி மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும், கால்வாயில் நீர் வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டமைப்புகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், வார்டு-15, மணலி புதுநகரில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, அதன் அருகில் செயல்பட்டு வரும் மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் வார்டு-22, சின்ன சேக்காடு, தேவராஜன் தெருவில் மேயரின் சிறப்பு மேம்பாட்டுத் திட்ட நிதியில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சத்துணவுக் கூடத்தினையும், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இந்திய பெட்ரோலிய கார்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இணைந்து நமக்கு நாமே திட்ட நிதியில் ரூ.32.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மையக் கட்டடத்தினையும் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மேயரின் சிறப்பு மேம்பாட்டுத் திட்ட நிதியில் மாதவரம் மண்டலம், வார்டு-28, தனசிங் மேஸ்திரி சாலையில் ரூ.54.30 லட்சம் மதிப்பீட்டிலும், வார்டு-33, டீச்சர்ஸ் காலனி, 4வது பிரதான சாலையில் ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்படவுள்ள மகளிர் நவீன உடற்பயிற்சிக் கூட கட்டுமானப் பணிகளை மேயர் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, மாதவரம் மண்டலம், வார்டு-30, ரெட்டேரி, ஜவஹர்லால் நேரு 200 அடி சாலையில் உள்ள உமாயா மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மேயர் பார்வையிட்டு, மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்களிடம் கலந்துரையாடி தேவைகள் குறித்து, கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம் (மாதவரம்), துரை சந்திரசேகர் (பொன்னேரி), வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டலக்குழுத் தலைவர்கள் ஏ.வி.ஆறுமுகம் (மணலி), எஸ்.நந்தகோபால் (மாதவரம்), மாமன்ற உறுப்பினர்கள் நந்தினி சண்முகம், ஆ.ராஜேந்திரன், அ.தீர்த்தி, சு. கனிமொழி, மோ. குணசுந்தரி, கோ.துரைசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






