

சென்னை,
மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில், 'நகரப் போக்குவரத்துக்கான மிகவும் சாத்தியமான நிதி ஏற்பாட்டை கொண்ட நகரம்' என்ற பிரிவில் சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்துக்கு "நகர போக்குவரத்துக்கான தேசிய பாராட்டு விருது” வழங்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற இந்திய நகர்ப் புறப் போக்குவரத்து மாநாட்டில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி மனோகர் லாலிடம் இருந்து மாநகர் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் ஜெயசீலன் தேசிய விருதை பெற்றுக்கொண்டார்.
உலக வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ், செயல்திறன் அடிப்படையில் நிதி இடைவெளி நிரப்பு நிதி வழங்கப்படுகிறது.
687 வழித்தடங்களில் 4,100 பஸ்களை இயக்கும் மாநகர போக்குவரத்துக்கழகம், பயணிகளின் பயன்பாடு, பஸ்களின் இயக்கத்திறன் மற்றும் முக்கிய செயல்திறன் குறியீடுகளை அடிப்படையாக கொண்டு தனது நிதி நிலைத்தன்மையை மேம்படுத்தி வருகிறது. இந்த விருது, பொதுப் போக்குவரத்து சேவைகளை வலுப்படுத்துவதில் கழகம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாகும்.