சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் - அமைச்சர் ஆர்.குமார் ஆய்வு

பணிகள் அனைத்தும் பருமழை தொடங்குவதற்கு முன்னதாக முடித்திட அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
அமைச்சர் ஆர்.குமார்
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ஆர். குமார், அடையாறு மண்டலங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகள் அனைத்தும் பருமழை தொடங்குவதற்கு முன்னதாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அமைச்சர் ஆய்வு

செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ஆர். குமார், அடையாறு மண்டலங்களுக்குட்பட்ட அடையாறு மண்டலத்தில், பரமேஸ்வரி நகர், அடையாறு முகத்துவாரம் மற்றும் வீராங்கால் ஓடை பகுதிகளில் நடைபெற்று வரும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை இன்று (21.06.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க, செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர், அடையாறு மண்டலத்தில், வார்டு-174க்குட்பட்ட பரமேஸ்வரி நகர் சாலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வண்டல் மண் வடிகட்டி தொட்டிகளில் கழிவுகள் மற்றும் வண்டல் மண் மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக அகற்றும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, அனைத்து தொட்டிகளையும் விரைந்து சுத்தம் செய்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

பின்னர், வார்டு-174க்குட்பட்ட அடையாறு முகத்துவாரத்தில் மழைக்காலங்களில் மழை நீர் தடையின்றி செல்வதற்கு ஏதுவாக மணற்மேடுகள் அகற்றுவது குறித்து நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்ட செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர், தற்பொழுது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பணிகள் தொடர்பாக திட்ட வரைபடத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து தொடங்கி முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, அடையாறு மண்டலம், வார்டு-176க்குட்பட்ட வேளச்சேரி, வீராங்கல் ஓடையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்த செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் கழிவுகள், வண்டல் மண், ஆகாயத்தாமரை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் பருமழை தொடங்குவதற்கு முன்னதாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com