

சென்னை,
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் கொரோனா வைரஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட 6 மண்டலங்களில் மட்டும் 40 லட்சம் பேர் வாழ்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் சோதனை செய்வது சாத்தியமில்லை; தேவையும் இல்லை. மாறாக, தீவிர நோய் பாதிப்பு பகுதிகளில் உள்ள சில லட்சக்கணக்கான மக்களை தனிமைப்படுத்துவது, அறிகுறி உள்ளவர்களுக்கு சோதனை செய்வது தான் ஆகியவை தான் இன்றைய சூழலில் சாத்தியமானது ஆகும். இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டியதும் மிகவும் அவசியம் ஆகும்.
தீவிர நோய் பாதிப்பு பகுதிகளில் உள்ளவர்களில் வாய்ப்புள்ளோரை அவர்களின் வீடுகளிலும், மற்றவர்களை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள கட்டிடங்களிலும் தனிமைப்படுத்த வேண்டும்.
நோய் அறிகுறிகள் கொண்டவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தால், அவர்களை எங்கு, எப்போது, எத்தகைய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதற்கான செயல்திட்டத்தை வகுத்து, விரைந்து செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும். இந்த பணிகள் முடிவடையும் வரை சென்னை மாநகர மக்கள் ஊரடங்கை தீவிரமாக கடைபிடித்து, நோய்த்தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.