சென்னை: திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை

ஆதம்பாக்கத்தில் திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன் (30 வயது). இவரது சொந்த ஊர் செஞ்சி ஆகும். பி.எஸ்சி. பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், வந்தவாசி மம்முன்னை கிராமத்தைச் சேர்ந்த ஷாலினி (26 வயது) என்ற பி.காம். பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த மாதம் 28-ந் தேதி நங்கநல்லூரில் திருமணம் நடந்தது. இருவரும் மறு வீடாக அவர்களது சொந்த ஊரான வந்தவாசி மற்றும் செஞ்சிக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் சென்னைக்கு திரும்பினர்.
நேற்று காலை ஷாலினிக்கு தலைவலிப்பதாக கூறியதால் அவருக்கு கடையில் மாத்திரை மற்றும் காலை உணவு வாங்கி கொடுத்து அதே பகுதியில் வசிக்கும் தனது சகோதரி விஜயா வீட்டுக்கு ஜெகன்நாதன் சென்றுவிட்டார். பின்னர் மதியம் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிவிட்டு ஷாலினி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாலினி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஷாலினிக்கு திருமணமாகி 10 நாட்களே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






