

சென்னை,
சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடம் பாரம்பரிய கட்டிடமாக அறிவிக்கப்பட்டு, புனரைமைப்பு பணிகள் மேற்கொண்டு தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது. போலீஸ் அருங்காட்சியகத்தில் போலீசார் அணிந்த சீருடைகள், பதக்கங்கள், காவல்துறையினர் பயன்படுத்திய ஆயுதங்கள், தளவாடங்கள். காவல் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டும், சிறைச்சாலை போன்ற வடிவமைப்பும் உள்ளது. இதுவரையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என சுமார் 1 லட்சத்து 94 ஆயிரம் பேர் இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளனர்.
தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் குறித்து பொதுமக்கள் அறியும் வண்ணம், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் (தலைமையிடம்) ஜோசி நிர்மல்குமார் ஆலோசனையின்பேரில் இந்த அருங்காட்சியகத்தில் வருகிற 26-ந்தேதி அன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையில் பிரமாண்ட உணவு திருவிழா நடைபெறுகிறது. பாரம்பரிய உணவு வகைகள் உள்பட பல்வேறு உணவுகளின் 'ஸ்டால்கள்' இடம்பெறும். இந்த உணவு திருவிழாவில் நுழைவுக் கட்டணம் இல்லை. மாணவ, மாணவிகள் உள்பட பொதுமக்கள், காவல் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு, உணவு திருவிழாவில் கலந்து சிறப்பிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.