பெண் இன்ஸ்பெக்டரின் பேச்சில் மயங்கி கோடிகளை இழந்த சென்னை போலீசார் - உயர் அதிகாரிகள் அதிர்ச்சி

துணை கமிஷனர் அந்தஸ்துக்கான அதிகாரிகளிடமும் லட்சக்கணக்கில் பணம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பெண் இன்ஸ்பெக்டரின் பேச்சில் மயங்கி கோடிகளை இழந்த சென்னை போலீசார் - உயர் அதிகாரிகள் அதிர்ச்சி
Published on

சென்னை,

குறைந்த விலைக்கு தங்க காசுகளை தருவதாக கூறி சென்னையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு சென்னை போலீசார் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

20 கோடி ரூபாய்

ராயபுரத்தில் பணிபுரிந்து வரும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி மீது இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஷீலா மேரியின் உறவினரான பிரபு மணியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இவர் இன்ஸ்பெக்டரின் போலீஸ் வாகனத்தில் சென்று குறைந்த விலையில் தங்க காசுகளை தருவதாக கூறி சென்னையில் பணியாற்றும் போலீசார் மற்றும் துணை கமிஷனர் அந்தஸ்துக்கான அதிகாரிகளிடமும் லட்சக்கணக்கில் பணம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 20 கோடி ரூபாய் அளவுக்கு இதுபோன்று பிரபு மணி பண வசூலில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தங்க காசுகள்

சென்னையில் பணியாற்றும் ஆண், பெண் காவலர்கள் மற்றும் உதவி கமிஷனர்கள் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தி லான அதிகாரிகளும் குறைந்த விலைக்கு தங்க காசுகள் கிடைக்கும் என்று நம்பி லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் ஷீலா மேரியும் பலரிடம் குறைந்த விலைக்கு தங்க காசுகளை வாங்கி தருவதாக கூறியதாகவும் அவரது ஆசை வார்த்தைகளை நம்பி பலரும் பணத்தை இழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறும்போது தங்களிடம் வந்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து உள்ளோம்.

இந்த விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் சிலர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளனர் அவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை

இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது பற்றி பொருளாதார குற்றப் பிரிவு போலீஸ்சாரிடம் கேட்டபோது அது தொடர்பாகவும் விசாரித்து வருகிறோம். கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அது பற்றி தெரிவிக்கிறோம் என்று கூறினார்கள்.

'மோசடி வழக்குகளை திறம்பட கையாண்டு பல்வேறு வழக்குகளில் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ள சென்னை மாநகர காவல் துறையினரே குறைந்த விலைக்கு தங்க காசுகள் கிடைக்கும் என்று ஆசைப்பட்டு பணத்தை இழந்திருப்பது உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப் படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

போலீஸ் கமிஷனர்

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அமல் ராஜ் உத்தரவின் பேரில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவில் இன்ஸ்பெகர் ஷீலா மேரி மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோசடி புகாருக்கு உள்ளாகி இருக்கும் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி இதற்கு முன்னர் திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்துள்ளார். தற்போது ராயபுரம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பென் அவர் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com