சென்னை: தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம்

தனியார் கூரியர் மூலம் அனுப்பப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
சென்னை: தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம்
தபால்துறை
Published on: 

சென்னை,

தென் சென்னை கோட்ட தபால் துறை சார்பில் வாடிக்கையாளர்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண்பதற்கான கோட்ட அளவிலான தபால் குறைதீர்ப்பு முகாம் (Dak Adalat) வரும் நவம்பர் 13-ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இதுகுறித்து தபால் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கபட்டிருப்பதாவது:-

முகாம் நடைபெறும் இடம்

சென்னை தியாகராயா நகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தியாகராயா நகர் வடக்கு அஞ்சலக வளாகத்தின் முதல் தளத்தில் இயங்கும் தென் சென்னை கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இம்முகாம் நடைபெறுகிறது. தென் சென்னை கோட்ட குறைதீர் முகாமின் தலைவர் வாடிக்கையாளர்களின் புகார்களை நேரடியாக கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பார்.

புகார்களை அனுப்ப வேண்டிய முகவரி

பொதுமக்கள் தங்களின் தபால் துறை தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைகளை, "முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், தென் சென்னை கோட்டம், வடக்கு உஸ்மான் சாலை, சென்னை - 600017" என்ற முகவரிக்கு வரும் நவம்பர் 9-ஆம் தேதிக்குள் (09.11.2026) அல்லது அதற்கு முன்னதாகக் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.

தபால் அல்லது விரைவு தபால்

புகார் அனுப்பும் கவரின் மீது “Division Dak Adalat - Chennai City South Division" என்று தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். புகார்களை சாதாரண தபால் அல்லது விரைவு தபால் (Speed Post) மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். தனியார் கூரியர் மூலம் அனுப்பப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

புகாரில் இடம்பெற வேண்டிய விவரங்கள்

அஞ்சல் கடிதங்கள் தொடர்பான புகார்

கடிதம் அனுப்பிய தேதி, நேரம், அனுப்புநர் மற்றும் பெறுநரின் முழு முகவரி இடம்பெற வேண்டும். மணியார்டர் (MO), மதிப்புத் தொகை செலுத்த வேண்டிய தபால் (VP), பதிவு தபால் (Registered Post), காப்பீடு செய்யப்பட்ட தபால் அல்லது விரைவு தபால் (Speed Post) ஆகியவற்றுக்கான பதிவு ரசீது எண், பதிவு செய்த தேதி மற்றும் அஞ்சலகத்தின் பெயர் தெளிவாக இருக்க வேண்டும்.

சேமிப்பு கணக்கு & காப்பீடு தொடர்பான புகார்

சேமிப்பு திட்டங்கள், அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) அல்லது கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு (RPLI) சார்ந்த புகாராக இருந்தால் கணக்கு எண்/காப்பீட்டு பாலிசி எண், வைப்பாளர்/காப்பீட்டுதாரரின் பெயர், முழு முகவரி, சம்பந்தப்பட்ட அஞ்சலகத்தின் பெயர் மற்றும் தபால் துறையிடமிருந்து ஏற்கனவே பெறப்பட்ட குறிப்புகள் ஏதேனும் இருந்தால் அதனை இணைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X