தொடர்மழையால் தத்தளிக்கும் சென்னை: டுவிட்டரில் டிரெண்டாகும் #ChennaiRains ஹேஸ்டேக்

#ChennaiRains என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகின்றது. பலரும் இந்த ஹேஷ்டேக்கில் சென்னை மழை குறித்த வீடியோ மற்றும் படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
தொடர்மழையால் தத்தளிக்கும் சென்னை: டுவிட்டரில் டிரெண்டாகும் #ChennaiRains ஹேஸ்டேக்
Published on

சென்னை:

சென்னையில் கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக மாறி இருந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் மிரட்டிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடைசி நேரத்தில் திசை மாறியதால் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீர் ஓரளவுக்கு வடிந்து இருந்தது.

இந்த நிலையில் மீண்டும் நேற்று இரவு கொட்டி தீர்த்த கனமழையால் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மழை நீர் தேங்கி உள்ளது.

இருப்பினும் பல சாலைகளில் வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து சென்று வருகின்றன. இதற்கிடையே 8 முக்கிய சாலைகள் மழை வெள்ளத்தால் முடங்கி உள்ளன.

கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் 2-வது அவென்யூ வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த சாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆற்காடு ரோடு செல்வதற்கு கேசவர்த்தினி சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

தி.நகர் வாணி மகால் முதல் பென்ஸ்பார்க் வரை தேங்கி நிற்கும் தண்ணீரால் அந்த சாலையிலும் போக்குவரத்து முடங்கி உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அபிபுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக செல்கின்றன.

கே.கே.நகர் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனை எளிதாக்கும் வகையில் உதயம் தியேட்டர் நோக்கி செல்லும் வாகனங்கள் எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது.

உதயம் தியேட்டர் சந்திப்பில் காசி தியேட்டர் முனையில் இருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் சாலையில் கனரக வாகனங்கள் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன.

மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள காமாட்சி மருத்துவமனை வழியாக சோழிங்கநல்லூர் நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

ராம்நகர் மெயின் ரோட்டில் சூழ்ந்துள்ள வெள்ளம் காரணமாக மடிப்பாக்கத்தில் இருந்து ராம்நகர் வழியாக வேளச்சேரி செல்லும் பஸ் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கீழ்க்கட்டளையில் இருந்து திருவான்மியூர் செல்லும் பஸ்கள் மேடவாக்கம் கூட்டு ரோடு, பள்ளிக்கரணை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் இருசக்கர வாகனங்கள் செல்லும் சுரங்கப்பாதையில் தண்ணீர் அதிகமாக உள்ளதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

தி.நகர் மேட்லி சுரங்கப்பாதையில் மழை நீர் அதிகம் தேங்கி உள்ளதால் போக்குவரத்து முழுமையாக முடங்கி உள்ளது. அந்த சுரங்கப்பாதையும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் டுவிட்டரில் சென்னை மழை குறித்து #ChennaiRains என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகின்றது. பலரும் இந்த ஹேஷ்டேக்கில் சென்னை மழை குறித்த வீடியோ மற்றும் படங்களை பதிவிட்டு வருகின்றனர்.சிலர் நகைச்சுவையாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com