கொலை மிரட்டல் வழக்கில் கைது: பா.ஜ.க. மாநில ஒ.பி.சி. அணி மாநில செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்

பா.ஜ.க.வின் ஒ.பி.சி. அணி மாநில செயலாளராக வெங்கடேஷ் செயல்பட்டு வந்தார்.
தமிழக பா.ஜ.க.வின் ஒ.பி.சி. அணி மாநில செயலாளராக வெங்கடேஷ் செயல்பட்டு வந்தார். பிரபல ரவுடியான வெங்கடேஷ் மீது செம்மரம் கடத்தல், பண மோசடி, துப்பாக்கி வைத்து மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இதனிடையே, சென்னை செங்குன்றத்தில் எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்கள் விநியோக டீலருக்கு வெங்கடேஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், அவரை மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். இது தொடர்பாக ஆவடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரவுடி வெங்கடேசை நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில், கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பா.ஜ.க. மாநில ஒ.பி.சி. அணி மாநில செயலாளர் வெங்கடேஷ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்த வெங்கடேஷ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.






